Type Here to Get Search Results !

ஆன்லைனில் மதுபானம்: பயனர்களின் தகவல்களைக் கறந்த போலி டாஸ்மாக் இணையதளம்; மதுக்கடைகள் மூடிய வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை; கோயம்பேடு கொரோனா பரவல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

ஆன்லைனில் மதுபானம்: பயனர்களின் தகவல்களைக் கறந்த போலி டாஸ்மாக் இணையதளம்
டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பெயரில் போலியாக இணையதள பக்கம் ஒன்று நேற்று வைரலாக பரவியது.

ஊரடங்கு காலம் முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாதென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்தால், அந்த விற்பனையை ஆன்லைன் மூலம் மேற்கொண்டு வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இந்த நிலையில், டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் ஒன்று புதிதாக இயங்கிவருகிகிறது. ஆன்லைனில் மதுபானம் டெலிவரி என்று அதில் குறிப்பிட்டுள்ள நிலையில், பயனர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் கேட்கப்படுகின்றன.

மது வகைகளுடன் சிப்ஸ், சிக்கன் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் இணையதளத்தில் இடம்பெற்றிருந்தன.

போலி இணையதளம் என்று தெரியாத நிலையில், பலரும் தங்களது முகவரி உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்தனர். நள்ளிரவு முதல் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

மதுக்கடைகள் மூடிய வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழகம் முழுவதும் தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு கடந்த 8-ந் தேதி உத்தரவிட்டது. தேவைப்பட்டால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு, வீடுகளுக்கே நேரடியாக சென்று விற்பனை செய்யும் (‘டோர் டெலிவரி’) முறையை மேற்கொள்ளலாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) காணொலி மூலம் விசாரிக்கிறது.

இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக விசாரிக்கவேண்டும் என்று பா.ம.க. வக்கீல் கே.பாலு, தே.மு.தி.க. வக்கீல் ஜி.எஸ்.மணி, மக்கள் நீதி மையம் கட்சியின் அமைப்பு பொதுசெயலாளர் ஏ.ஜி.மவுரியா, மக்கள் அதிகாரம் அமைப்பின் ஜி.ராஜேஷ், டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வக்கீல் ஆனந்த செல்வம், மகாலஷ்மி மகளிர் ஆயம் லஷ்மி மணியரசன் ஆகியோர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கோயம்பேடு கொரோனா பரவல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
கோயம்பேடு சந்தையில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியதே கொரோனா நோய் தொற்று பரவலுக்கு அடிப்படை காரணம் என்று தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்தநிலையில், கோயம்பேடு கொரோனா பரவல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கொரோனோ தொற்று ஏற்பட்டதும் துரிதமாக தமிழக அரசு செயல்பட்டது. கோயம்பேடு சந்தையை உடனடியாக மூட முடியாது என தெரியும்.அனைத்து தரப்பினரின் நலனையும் ஆய்வு செய்து எடுத்த நல்ல முடிவு எடுக்கப்பட்டது.

3 இடங்களில் சந்தையை பிரித்து வைக்குமாறு கூறினோம். வியாபாரிகள் பிரதிநிதிகளுடன் துணை முதல்-அமைச்சரும் பேசினார். கோயம்பேடு சந்தையை 5 நாட்களில் மாற்றினோம்.

கோயம்பேடு மார்க்கெட் தொடர்பாக எடுத்தேன், கவிழ்த்தேன் என முடிவு எடுக்க முடியாது. தொற்று ஏற்பட்டதும் அரசு துரிதமாக செயல்பட்டு அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் முடிவு எடுத்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad