பாரதப் பிரதமர் திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் கிடைக்கும் எனக்கூறி வறுமையில் வாடும் கிராம மக்களிடம் 1.5 லட்சம் திருட்டு

பாரதப் பிரதமர் திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் கிடைக்கும் எனக்கூறி வறுமையில் வாடும் கிராம மக்களிடம் 1.5 லட்சம் திருட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில், பாரதப் பிரதமர் திட்டத்தின் கீழ் ஐந்தாயிரம் ரூபாய் தருவதாகக் கூறி ஓடிபி எண் மூலம் இருளர் இன மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அருகே சென்னேரி கிராமம் உள்ளது. இங்குள்ள பெரிய புத்தேரி பகுதியில் இருளர் இன பழங்குடிகள், 89 குடும்பங்களாக வசித்து வருகின்றனர். சென்னேரி வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதி என்பதால், இருளர்களில் பலர் வனப்பகுதியைச் சார்ந்து வாழ்கின்றனர்.

சிலர், விவசாயக் கூலி வேலை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு, செல்வி என்ற பெண்மணியின் செல்போன் எண்ணுக்கு ஓர் அழைப்பு வந்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து மேலாளர் ரவிக்குமார் பேசுவதாகக் கூறிய அந்த நபர், பிரதமரின் திட்டத்தின் கீழ் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படுவதாகக் கூறியுள்ளார். அந்த சலுகையைப் பெற, ஏடிஎம் அட்டையின் கடைசி நான்கு எண்கள், மற்றும் செல்போனுக்கு வரும் ஓடிபி எண் ஆகியவற்றை சொல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.

செல்வியின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று தெரிந்த உடன் அந்த மர்ம நபர் மற்ற இருளர் மக்களுக்கும் இந்த பயனுள்ள தகவலை தெரிவிக்கும்படி நல்லவர் போல் நடித்துக் கூறியுள்ளார்.  செல்வியும் மற்ற நபர்களை ரவிக்குமாரிடம் பேச வைத்துள்ளார்; ஒவ்வொருவரும் அவரவர் செல்போன் எண்ணுக்கு வந்த ஓடிபி எண்ணைத் தெரிவித்துள்ளனர்

சிறிது நேரத்தில் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் உள்ள பணம் அத்தனையும் மொத்தமாக திருடப்பட்டுள்ளது. மீண்டும் அந்த நபரைத் தொடர்பு கொண்ட போது, மாலை 4 மணிக்கு அல்லது மறுநாள் வரும் என அந்த மர்ம நபர் தெரிவித்துள்ளார்குறுஞ்செய்தியை வாசித்துப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தவர்கள் அங்கு வந்த தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணித்தளப் பொறுப்பாளர் கலைச்செல்வியிடம் காட்டிய போதுதான் பணம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.

இப்படி மொத்தம் 49 பேரிடம் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கிராம நிர்வாக அதிகாரிக்குத் தகவல் அளிக்கப்பட்டு அவர் மூலம், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா ஊரடங்கில் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் இருளர்களுக்கு இந்த சம்பவம் பேரிடியாக மாறியுள்ளது. போலீசார் விரைந்து செயல்பட்டு மோசடி நபரைக் கைது செய்ய வேண்டும் என இருளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url