Type Here to Get Search Results !

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 5 வீரர்கள் வீர மரணம்: கொரோனாவில் இருந்து மீண்ட 106 வயது பாட்டி; விழுப்புரத்தில் 11 கிராமங்களை தனிமைப்படுத்த உத்தரவு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 5 வீரர்கள் வீர மரணம்: தியாகத்தை என்றும் மறக்க மாட்டோம் - ராஜ்நாத் சிங்
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவி இந்திய பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ள வடக்கு காஷ்மீரில் மாவட்டத்தின் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இதில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேநேரத்தில், இந்த துப்பாக்கிச்சூட்டில் கர்னல், மேஜர் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்கள் மற்றும் காஷ்மீர் காவல்துறை சப் - இன்ஸ்பெக்டர் என மொத்தம் 5 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதலால் அப்பகுதி மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் சுமார் 8 மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது.

ஹந்த்வாராவின் சங்கிமுலில் இருந்த ஒரு வீட்டில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாகவும், இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து தீவிரவாதிகள் குறித்து சோதனை செய்ததாகவும் பாதுகாப்புப்படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் குறித்த தகவல் புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து வந்ததாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த கமான்டிங் அதிகாரியான கர்னல் அஷுடோஷ் ஷர்மா, இதற்கு முன்பு பல வெற்றிகரமான தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காகவும், பல பொது மக்களின் உயிரைக் காப்பாற்றியதற்காகவும் அவர் இரு கேலண்டரி விருதுகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டுவீட் செய்துள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்,

ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்புப்படை வீரர்களின் உயிரிழப்பு தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். அவர்களின் தைரியம் மற்றும் தியாகத்தை என்றும் மறக்க மாட்டோம் என்றும், தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இன்று தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துணிச்சலான தியாகிகளின் குடும்பங்களுக்கு இந்தியா எப்போதும் தோளோடு தோள் நிற்கும்.


கொரோனாவில் இருந்து மீண்ட 106 வயது பாட்டி 


ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தீவிரமாக ஆட்பட்ட நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் நாடு திகழ்கிறது. அங்கு 1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கியது. 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் அங்கு ஓய்வு பெற்றவர்களுக்கான இல்லத்தில் வசித்து வந்தவர், ஹெலன் லெபவ்ரே. இந்தப் பாட்டிக்கு வயது 106. இவரையும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கியது. கடந்த 15-ந்தேதி மருத்துவ பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் அவர் தங்கி இருந்த இடத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். தற்போது அவர் கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து முழுமையாக மீண்டு குணம் அடைந்து விட்டார்.

பிரான்சில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து குணம் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் ‘சதம்’ அடித்த பாட்டி கொரோனாவில் இருந்து மீண்டு இருப்பது அங்கு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா எதிரொலி; விழுப்புரத்தில் 11 கிராமங்களை தனிமைப்படுத்த உத்தரவு
ஊரடங்கு 2வது முறையாக நீட்டிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.  சென்னையில் அதிக அளவு பாதிப்பு உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற 7 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதியானது.  இதேபோன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூருக்கு சரக்கு வாகனங்கள் மூலம் சென்ற தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 2 சிறுவர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது முடிவானது.

இதனை முன்னிட்டு கடலூர் மற்றும் அரியலூரில் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது.  கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம் வந்த தொழிலாளர்களில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்போடு மூலம் பெரம்பலூரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரம் சென்றவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.  இதனால், விழுப்புரத்தில் 11 கிராமங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.  நேற்று முன்தினம் ஒருவர் மற்றும் நேற்று 2 பேருக்கு என விழுப்புரத்தில் 20 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து சென்றவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் விழுப்புரத்தில் ஆவுடையார்பட்டு, பஞ்சமாதேவி, கண்டமானடி, திருப்பாச்சனூர், ராம்பாக்கம், கயத்தாறு, குத்தாம்பூண்டி, தும்பூர், பூண்டி, கஸ்பா காரணை, அசோகபுரி ஆகிய 11 கிராமங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.  கோயம்பேடு சந்தையில் இருந்து வருபவர்களை கண்டறியும் பணி தீவிரம் அடைந்துள்ளது.  தீவிரமாக கண்காணிக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad