Type Here to Get Search Results !

ராமேசுவரத்தில் தலைமறைவாக இருந்த வெளிநாட்டுக்காரர் சிக்கினார்

ராமேசுவரத்தில் தலைமறைவாக இருந்த வெளிநாட்டுக்காரர் சிக்கினார் - விடுதி உரிமையாளர் மீதும் வழக்கு
ராமேசுவரத்தில் தலைமறைவாக இருந்த வெளிநாட்டுக்காரர் சிக்கி உள்ளார். அவரைப்பற்றி தகவல் கொடுக்காத விடுதி உரிமையாளர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை தடுக்க கடந்த 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே ராமேசுவரத்தில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் மூடியே கிடக்கின்றன.

இந்தநிலையில் ராமேசுவரத்தில் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தடையை மீறி வெளிநாட்டுக்காரர் ஒருவர் தங்கி இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவுக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின்படி அக்னிதீர்த்த கடற்கரை அருகே உள்ள அந்த தங்கும் விடுதிக்கு தாசில்தார் அப்துல்ஜபார், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் மற்றும் மத்திய-மாநில உளவுப்பிரிவு போலீசார், சுகாதார துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.

அங்கு விடுதி அறையில் இருந்த வெளிநாட்டுக்காரரை பிடித்து உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து அவரை சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும் உளவுப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஜன்டன்சார்லஸ் டேனியல் (வயது 69) என்பது தெரியவந்தது. அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

சுவிட்சர்லாந்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி கொச்சியில் உள்ள விமானம் நிலையத்தில் வந்திறங்கி, அங்கு சுற்றி பார்த்து விட்டு அதன் பின்னர் கன்னியாகுமரி சென்றேன். 17-ந் தேதி ராமேசுவரம் வந்து தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தேன்.

ஊரடங்கு உத்தரவால் ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் சொந்த நாடு செல்ல முடியாமல் கஷ்டப்படுகிறேன். சொந்த நாட்டிற்கு செல்ல விரும்புவதால் சென்னையில் உள்ள துணை தூதரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


இந்நிலையில் வெளிநாட்டு முதியவர் தலைமறைவாக தங்கியிருந்த தகவலை தெரிவிக்காமல் மறைத்த தங்கும் விடுதி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம நிர்வாக அதிகாரி ரொட்ரிகோ கொடுத்த புகாரின் அடிப்படையில் தங்கும் விடுதி உரிமையாளர் ஆம்ஸ்ட்ராங்க் மீது நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்து சிக்கியவர்களுக்கு தண்டனை காத்திருக்கு
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சிலர் பொறுப்பற்ற முறையில் இரு சக்கரவாகனங்களில் சென்று போலீசாரிடம் சிக்குகிறார்கள். உடனே அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களுக்கு தண்டனை காத்திருக்கிறது.

full-width ஊரடங்கு காலத்தில் போலீசாருக்கு பெரும் சவாலாக இன்றளவும் இருப்பது இரு சக்கரவாகனத்தில் சுற்றித்திரிவோரை கட்டுப்படுத்துவதுதான். ஒரு சிலர் மட்டுமே அத்தியாவசியத்துக்காக வாகனங்களில் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். பெரும்பாலானோர் பொறுப்பற்ற நிலையில் திரிபவர்கள்தான்.

வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்கிறார்கள். அனைவரையும் சொந்த ஜாமீனில் விடுவித்து விடுகிறார்கள். ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டை நகலை மட்டும் வாங்கிக்கொண்டு வெளியே விட்டுவிடுவதால் பலர் இதனை பொருட்படுத்தாமல் உள்ளனர். ஆனால் அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்படுகிறது. அதன் மூலம் பின்னர் எப்படி சிக்கப்போகிறோம் என்பதை பலர் உணரவில்லை.

ஜெயிலில் தள்ளவாய்ப்பில்லை, அந்த அளவுக்கு இடவசதி இல்லை, கோர்ட்டுக்கும் கொண்டு செல்ல முடியாது இதையெல்லாம் கருதியே போலீசார், வழக்குபதிவு செய்து விட்டு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஊரடங்கு விலக்கப்பட்ட பிறகுதான் தண்டனை இருக்கிறது.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் கூறியதாவது:-

தடை உத்தரவு காலத்தில் இரு சக்கரவாகனத்தில் சென்று சிக்குவோர் மீது இந்திய தண்டனை சட்டம் 269, 270 மற்றும் பிரிவு-3, 188, 54 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம். இதில் விருதுநகர் மாவட்டத்தில் பிரிவு- 3 மற்றும் 188-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரிவுகளில் சிக்கியிருப்பவர்களுக்கு 6 மாதம் சிறை மற்றும் அபராதம் விதிக்க இடமுள்ளது. இதனை கோர்ட்டு தீர்மானிக்கும். ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்ட பிறகு இதற்கான நடைமுறையை போலீசார் மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் சுற்றித்திரிந்து சிக்கியவர்கள் தண்டனை காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி. மேலும் அரசு ஊழியர்கள் சிலரும் இந்த வகையில் மாட்டியுள்ளனர். தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில் வேலைக்கே அது வேட்டு வைக்கும்.

மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கிராமப்பகுதிகளுக்கு மினி வேன்களில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு விடும் நிலையிலும் கிராமங்களில் இருந்து தேவையில்லாமல் இளைஞர்கள் தடையை மீறி இரு சக்கரவாகனங்களில் வருவதாகவும் அவர்களை வீடுகளுக்கு திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினால் தேவையில்லாமல் பிரச்சினை செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான கடைகள் பூட்டப்பட்ட பிறகும் நகர்ப்புறங்களில் இரு சக்கரவாகனங்களில் சமூக விலகலை புறக்கணித்து செல்லும் நிலை உள்ளதால் இரு சக்கரவாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதற்கு அரசு கட்டுப்பாடு விதித்தால் இரு சக்கரவாகனங்களின் நடமாட்டம் குறையும்” என்றும் தெரிவித்தார்.

இதுபற்றி கலெக்டர் கண்ணனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், “அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசு அறிவுறுத்தியபடிதான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு இருக்கையில் பெட்ரோல் பங்குகளில் இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவது குறித்து தமிழக அரசுதான் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும்” என்றார்.

நெல்லை அருகே, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்; 4 பேர் கைது
நெல்லை அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் அருகே உள்ள சன்னது புதுக்குடியை பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமல் நின்று கொண்டு இருந்தனர்.

அங்கு போலீசார் சென்றனர். அவர்களை பார்த்ததும் அங்கு நின்று கொண்டு இருந்தவர்கள் கலைந்து ஓடினார்கள். அங்கு நின்று கொண்டு இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.

அங்கு இருந்தவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓட முயன்றனர். அதற்குள் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியை சேர்ந்த பால்மாரி (வயது 23), சன்னது புதுக்குடியை சேர்ந்த முருகன் (50), அழகிய பாண்டியபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் (56), நாராயணசாமி (40) என்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன், கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அவரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad