Type Here to Get Search Results !

சிகிச்சைக்காக மனைவியை 145 கி.மீ. தூரம் சைக்கிளில் அழைத்து சென்ற தொழிலாளி: ஊரடங்கால், போக்குவரத்து நிறுத்தம் - கிராம மக்கள் பாராட்டு

ஊரடங்கால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நேரத்தில் சிகிச்சைக்காக மனைவியை கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு 145 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் அழைத்து சென்று வந்த தொழிலாளியை கிராம மக்கள் ஒன்று கூடி பாரட்டினர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மகாராஜபுரத்தை சேர்ந்தவர் அறிவழகன்(வயது 63). விவசாய கூலித்தொழிலாளியான இவரது மனைவி மஞ்சுளா. இவர், கடந்த சில வருடங்களாக புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருக்க மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அறிவழகன் தனது மனைவி மஞ்சுளாவை பஸ்சில் அழைத்து செல்ல முடியவில்லை. கார் மற்றும் வேறு வாகனங்களில் அழைத்து செல்ல அரசு அனுமதி பெற பல்வேறு விதிமுறைகள் அமலில் இருந்ததால் அதைப்பற்றி அவரால் அறிந்து கொள்ளவும் முடியவில்லை.

இந்த நிலையில் மஞ்சுளாவிற்கு நோயின் தாக்கம் அதிகரித்தது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த அறிவழகன் தனது வயதான நிலையையும் பொருட்படுத்தாமல் மனைவியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மனைவியை சைக்கிளில் அழைத்துச்செல்வது என்று முடிவு செய்தார். இதனைத்தொடர்ந்து அவர் தனக்கு சொந்தமான பழைய சைக்கிளில் மனைவியை உட்கார வைத்து புதுச்சேரிக்கு அழைத்து சென்றார். வழியில் தங்களுக்கு தேவையான உணவு, உடை, தண்ணீர் ஆகியவற்றை சைக்கிளில் வைத்ததுடன் அவரது மனைவியை பின்புறம் உட்கார வைத்து மயிலாடுதுறை, சீர்காழி வழியாக புதுச்சேரிக்கு கிளம்பினார்.

செல்லும் வழியில் தன்னை தடுத்த போலீசாரிடம் தனது நிலையை விளக்கினார். இதையறிந்த போலீசார் பலர் அவருக்கு தேவையான உதவிகள் செய்து செல்லும் வழியில் எளிதாக உள்ள சாலைகளை சொல்லி உதவினர். இதையடுத்து கும்பகோணத்தில் இருந்து 145 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை அடைந்தார்.

அப்போது அங்கிருந்த டாக்டர்கள் அறிவழகனிடம், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நேரத்தில் எப்படி இவ்வளவு துாரம் வந்தீர்கள்? என்று கேட்டனர். அதற்கு அவர், சைக்கிளில் அழைத்து கொண்டு வந்தேன் என கூறியுள்ளார். அதைக் கேட்டதும் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவ்வளவு தூரம் சைக்கிள் ஓட்டி வர உங்களது வயது ஒத்துழைத்ததா? என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், எனது உடல்நிலையை பற்றி எனக்கு எதுவும் நினைக்க தோன்றவில்லை. எனது மனைவியை எப்படியாவது சிகிச்சைக்கு அழைத்து வரவேண்டும் என்றுதான் எனது மனதில் ஒரே எண்ணமாக ஓடியது. இதைத்தவிர வேறு எதுவும் என் மனதில் தோன்றவில்லை. உடனே மிகுந்த மனஉறுதியோடு என்னிடமிருந்த ஒரே சைக்கிளை நம்பி புறப்பட்டு மருத்துவமனைக்கு வந்தேன் என கூறியுள்ளார். இந்த வயதிலும் அறிவழகனின் மன உறுதி மற்றும் மனைவி மீதான அவரது அளவற்ற அன்பை கண்டு டாக்டர்கள் மனம் உருகினர். இதன்பின்னர் மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர்கள், மஞ்சுளாவை 3 நாட்கள் மருத்துவமனையில் தங்க வைத்து சிறப்பான சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கும்பகோணம் திரும்புவதற்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து 2 ஊழியர்களையும் உதவிக்குஅனுப்பி வைத்ததுடன், அறிவழகனின் சைக்கிளையும் ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.


தனது வயதையும், உடல்நிலையையும் பொருட்படுத்தாது மனைவியை சிகிச்சைக்காக கும்பகோணத்தில் இருந்து 145 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புதுச்சேரிக்கு அன்பழகன் சைக்கிளில் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து அறிவழகனின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது. இந்த நிலையில் ஊர் திரும்பி வந்த அறிவழகனுக்கு கிராம மக்கள் ஒன்று கூடி பாராட்டு தெரிவித்தனர்.

தென்காசியில் கொரோனா அச்சம்: காய்ச்சலால் பாதித்தவர் வசித்த தெருவை மூடிய பொதுமக்கள்
தென்காசியில் கொரோனா அச்சம் காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் வசித்த தெருவை பொதுமக்களே மூடி விட்டனர்.

கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தென்காசி மாவட்டத்தில் இதுவரை 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு நெல்லையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் 2 பேர் குற்றாலம் அருகே உள்ள நன்னகரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதனால் அந்த பகுதி சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் யாரும் செல்ல முடியாதவாறு தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். இந்தநிலையில் தென்காசி புதுமனை 2-வது தெருவில் வசித்து வரும் ஒருவருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதற்கட்ட பரிசோதனை செய்வதற்காக ரத்த மாதிரி மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதனால் அச்சமடைந்த அவர் வசித்து வந்த பகுதியை சேர்ந்தவர்கள், அந்த தெருவை பேரிகார்டு மூலம் தாங்களாகவே மூடினர். இந்த பகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெளியில் இருந்து யாரும் உள்ளே வரவும், உள்ளே இருந்து யாரும் வெளியே செல்லவும் அனுமதிக்கப்படுவது இல்லை. இதுகுறித்து நகரசபை சுகாதாரத்தறை அதிகாரிகளிடம் கேட்டபோது, காய்ச்சல் வந்தவருக்கு முதல் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று வந்துள்ளது. மற்றொரு முறை பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர். மேலும் நகரசபை மூலம் சம்பந்தப்பட்ட தெருவுக்கு சீல் வைக்கவில்லை என்றும் கூறினார்கள்.

ராமநாதபுரத்தில் பங்குத்தந்தைகள் மட்டும் பங்கேற்ற ஈஸ்டர் சிறப்பு திருப்பலி
ராமநாதபுரம் கிறிஸ்தவ ஆலயத்தில் பங்குத்தந்தைகள் மட்டும் பங்கேற்ற ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடந்தது.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகையொட்டி பாம்பனில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் நேற்று மாலை 6.30 மணி அளவில் சிறப்பு திருப்பலி தொடங்கியது. ஊரடங்கு உத்தரவு காரணமாக பங்கு தந்தைகள் மட்டும் பங்கேற்றனர். ஆலய பங்குத்தந்தை பிரிட்டோஜெயபால் தலைமையில் நடந்த திருப்பலி பூஜை 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.

கொரோனா வைரஸ் அழியவும், அந்த வைரசால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நலமடைய வேண்டியும் சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது. இந்த திருப்பலி பூஜையில் உதவி பங்குத்தந்தை ரிச்சர்ட் மற்றும் அருட் சகோதரிகள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

full-width பங்கு இறை மக்கள் யாரும் இல்லாமல் முதல் முறையாக இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற அதே நேரத்தில் வீட்டில் இருந்தபடியே பங்கு இறைமக்கள் பிரார்த்தனை செய்தனர். இதேபோல் தீவு பகுதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் மக்கள் இல்லாமல் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஈஸ்டர் பண்டிகையை உறவினர்களோடு மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாததால் கிறிஸ்தவ மக்கள் மனவேதனை அடைந்தனர். இதேபோல ராமநாதபுரம் தூய ஜெபமாலை அன்னை ஆலயத்திலும் ஈஸ்டர் திருப்பலியை பங்குத்தந்தைகள் மட்டும் நடத்தினர்.

இதேபோல் மதுரை புதூர் லூர்து அன்னை ஆலயத்தில் நேற்று இரவு ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அப்போது பங்குத்தந்தை தாஸ் கென்னடி மட்டும் திருப்பலியை நடத்தினர்.

வருமான இழப்பை ஈடுகட்ட கிராமங்களில் உருவாகிய திடீர் திண்ணை கடைகள்
கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வருமான இழப்பை ஈடுகட்ட கிராமங்களில் உற்பத்தியான காய்கறிகள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்ய திடீர் திண்ணை கடைகள் உருவாகி உள்ளன.

ஊரடங்கு உத்தரவு மூலம் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவு மக்களை காப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது என்பதால் அனைவரும் வாழ்வாதாரம் இழந்தாலும் தங்களை தாங்களே தற்காத்து கொள்ள ஒத்துழைத்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவினால் மக்கள் முடங்கி போனாலும் அவர்களுடன் வாழ்வாதாரமும் ஒட்டுமொத்தமாக முடங்கி போய் உள்ளது. உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அதுதொடர்பான வியாபாரம் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது.

கிராமங்களில் விளையும் காய்கறிகள் உள்ளிட்டவைகளை நகர்பகுதிகளுக்கு சென்று சாலையோரங்களில் பரப்பி விற்பனை செய்பவர்களே அதிகம். இவ்வாறு விற்பனை செய்யும் பணத்தில் கிடைக்கும் லாபத்தை வைத்தே கிராமங்களில் இன்றளவும் தங்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றியும், சேமிப்பாகவும் வைத்து வருகின்றனர். இவ்வாறு கிராமவாசிகளை இந்த ஊரடங்கு உத்தரவு பெரியஅளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்கள் வீடுகளின் பின்னால், தோட்டங்களில் விளையும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை நகர்பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய வாகன வசதி இல்லாததால் இதுபோன்ற விற்பனையாளர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

இவர்களுக்கு தற்போது கைகொடுத்துள்ளது அவர்களின் வீட்டு திண்ணை, வாசல் தான். கிராமங்களில் தற்போது திடீர் திண்ணை கடைகள் பரவலாக தொடங்கப்பட்டுள்ளன. தங்களிடம் விளையும் காய்கறிகள் உள்ளிட்டவைகளை ஊருக்குள்ளும், அருகில் உள்ள கிராமங்களுக்கும் கூடைகளில் எடுத்து சென்று அதிகாலையிலேயே விற்பனையை தொடங்கி விடுகின்றனர். இதன்பின்னர் மீதம் உள்ளவைகளை தங்களின் வீடுகளின் திண்ணையிலும், வாசலிலும் வைத்து அந்த வழியாக செல்பவர்கள், தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். மொத்தமாக விற்பனை செய்ய முடியாவிட்டாலும் திண்ணை கடைகளின் மூலம் விளைபொருட்கள் வீணாகாமல் விற்பனையாவதோடு, அதன்மூலம் வருமான இழப்பை சரிகட்ட வருமானம் கிடைப்பதால் கிராம மக்கள்,விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவால் வருமானம் இல்லை; உணவுக்காக கண்மாய்களில் மீன்பிடிக்கும் இளைஞர்கள்
ஊரடங்கு உத்தரவால் வேலைக்கு செல்ல முடியாமல் கிராம இளைஞர்கள் கண்மாய்களில் மீன் பிடித்து வீடுகளில் சமைத்து வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவால் நகர்ப்புற மக்கள் வீடுகளில் டி.வி. பார்ப்பது, செல்போனில் விளையாடுவது உள்ளிட்டவைகளில் கவனத்தை செலுத்தி நேரத்தை போக்கி வருகின்றனர். இளைஞர்கள் இன்னும் கொரோனாவால் ஏற்படும் ஆபத்தை உணராமல் காரணமின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிகின்றனர். ஆனால் கிராமப்புற இளைஞர்கள் கண்மாய், குட்டைகளுக்கு சென்று தூண்டில் மற்றும் மீன் வலை போட்டு மீன்பிடிக்கின்றனர். இது அவர்களுக்கு சிறந்த பொழுது போக்காக உள்ளது என தெரிவிக்கின்றனர். அவ்வாறு பிடிக்கும் மீன்களை தங்களது வீடுகளில் சமைக்க பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மீன் பிடித்து வரும் இளைஞர்கள் தரப்பில் கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. இதுதவிர வீடுகளில் எவ்வித வருமானமும் இல்லாமல் இருப்பதால் உணவிற்கு தேவையான பொருட்கள் வாங்க முடியாத நிலையும் உள்ளது. அன்றாட கூலி வேலைக்கு செல்லும் நாங்கள் தற்போது வேறு வேலைக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே தான் அருகில் உள்ள கண்மாய், குட்டை ஆகியவற்றுக்கு சென்று தூண்டில் மற்றும் வலை மூலம் மீன்களை பிடித்து நேரத்தை போக்கி வருகிறோம். இவ்வாறு பிடிக்கும் மீன்களை உணவிற்கும் பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

திருச்சி மாநகரில் ஊரடங்கு கெடுபிடி: தற்காலிக சந்தைகள் மூடப்பட்டதால் வாகனங்கள் இன்றி வெறிச்சோடியது
திருச்சி மாநகரில் ஊரடங்கு கெடுபிடியாலும் தற்காலிக சந்தைகள் மூடப்பட்டதாலும் வாகனங்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை காய்கறிகள் வாங்க செல்லவும், இதர அத்தியாவசிய தேவை மற்றும் ஆஸ்பத்திரி செல்லவும் மற்றும் மருந்துகடைகளுக்கு சென்று மருந்து வாங்கவும் இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

வாகனங்களில் தேவையின்றி சுற்றி வருவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனாலும் ஊரடங்கிற்கு கட்டப்பட வில்லை. திருச்சி மாநகரில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையே பொதுமக்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் வாங்குவோர் தங்களது வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் சென்று வரவேண்டும் என்றும், 4 சக்கர வாகனம் பயணத்துக்கு தடையும் விதிக்கப்பட்டது.

இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஆஸ்பத்திரி மற்றும் மருந்து வாங்க செல்வோருக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் திருச்சி மாநகரில் 8 இடங்களில் இயங்கி வந்த தற்காலிக காய்கறி சந்தைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நேற்றும், இன்றும் சந்தைகள் இயங்க தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக நேற்று திருச்சி மாநகரில் இருசக்கர வாகனங்களில் வெளியில் செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இருசக்கர வாகனத்தில் தம்பதியாக வந்தவர்களை போலீசார் ஆங்காங்கே தடுத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். திருச்சி எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானா, கோட்டை அருணாசலம் மன்றம் ரவுண்டானா, ஜங்ஷன் ரவுண்டானா, தலைமை தபால் நிலைய ரவுண்டானா, பாலக்கரை ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டிருந்த திருச்சி மத்திய பஸ் நிலையம், அண்ணா விளையாட்டரங்கம் முன்புறம், சத்திரம் பஸ் நிலையம், தென்னூர் உழவர்சந்தை திடல் உள்ளிட்ட பகுதியில் காய்கறிகள் விற்பனை இல்லாததால் வியாபாரிகள் உள்ளிட்ட யாரும் இன்றி மைதானம் வெறுமையாக காணப்பட்டது. அதே வேளையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வருவோர் மட்டும் வழக்கம்போல வந்து சென்றனர்.

தற்காலிக காய்கறி கடைகள் மூடப்பட்டதையொட்டி, திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் சந்து மற்றும் தெருக்களின் ஓரங்களில் சாலையோர வியாபாரிகள் சிலர் காய்கறிகளை விற்பனை செய்தனர். மேலும் தள்ளுவண்டிகள் மூலம் வீதி வீதியாக காய்கறிகள் விற்பனை செய்வோர் வழக்கமாக தங்களது தொழிலை மேற்கொண்டிருந்தனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பலசரக்கு கடைகளில் 12 வகையான மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு - பொதுமக்கள் தவிப்பு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பலசரக்கு கடைகளில் 12 வகையான மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் சாலையில் நடமாடக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளை காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தடை உத்தரவு எதிரொலியாக காய்கறி மார்க்கெட்டுகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. அதேவேளை மளிகை கடைகளிலும் பொருட்களின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் பலசரக்குக் கடைகளில் 12 வகையான மளிகை பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மளிகை பொருட்கள்

இதனால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே மசாலா பொடி பாக்கெட்டுகள், பருப்பு வகைகள், எண்ணெய் உள்ளிட்டவற்றை வியாபாரிகள் விற்பனை செய்கிறார்கள்.

உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு போன்ற பருப்பு வகைகள் ஏராளமான கடைகளில் கிடைப்பதில்லை. நறுமணப் பொருட்களும் விற்பனை செய்யப்படுவது இல்லை. எப்போது என்ன பொருட்கள் கேட்டாலும், ‘இப்போது இல்லை, சரக்கு வந்ததும் தருகிறேன்’, என்பதே பெரும்பாலான கடைக்காரர்களின் தற்போதைய பதிலாக இருந்து வருகிறது.

பொதுமக்கள் புகார்

அந்த அளவுக்கு கடைகளில் மளிகைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைப்பது இல்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.

இதுதொடர்பாக நெல்லை டவுனை சேர்ந்த வியாபாரிகள் சங்க தலைவர் எம்.ஆர்.குணசேகரன் கூறியதாவது:-

முன்புபோல மொத்த வியாபாரிகளிடம் இருந்து சரக்குகளை பெற முடிவதில்லை. பொருட்களை வாங்க நாங்களே வண்டி எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் சொல்லும் விலையும் எங்களுக்கு கட்டுப்படி ஆகவில்லை. இதனால் குறைவான அளவிலேயே பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறோம். நெல்லை, தென்காசிக்கு மதுரை, சேலம், கரூர் ஆகிய ஊர்களுக்கு சென்று பொருட்களை வாங்கி வரவேண்டி உள்ளது. முன்பு ரெகுலர் சர்வீஸ் லாரி மூலம் பொருட்களை அனுப்பி வைப்பார்கள். ஆனால் தற்போது நாங்களே நெல்லையில் இருந்து லாரியை அனுப்பி வைப்பதால் 2 மடங்கு வாடகை ஆகிறது. நெல்லை டவுனில் மொத்த கடைகளின் அருகில் லாரிகளை அனுமதிக்க மறுப்பதால் அதனை 3 சக்கர வண்டிகளில் கடைகளுக்கு எடுத்துச்செல்வதால் இறக்குவதற்கான கூலி 3 மடங்கு ஆகிறது. இது பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது.

தற்போது கோதுமை மாவு, புளி, ரவை, சேமியா, கடுகு, சீரகம், உளுந்து, பாமாயில் உள்பட 12 வகையான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மற்ற பொருட்களும் 4 நாட்களுக்குத்தான் ஓரளவுக்கு இருப்பு உள்ளது. அதன்பிறகு மளிகை பொருட்கள் இல்லாத நிலை உருவாகும். எனவே, தடை உத்தரவு எந்த அளவில் இருந்தாலும் பாதுகாப்புடன் உற்பத்தியை தொடங்குவதற்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே மளிகை பொருட்கள் தட்டுப்பாட்டை போக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்டம் முழுவதும் ரேஷன்கடைகளில் தொடரும் தரமற்ற அரிசி வினியோகம்
மாவட்டம் முழுவதும் ரேஷன்கடைகளில் தொடர்ந்து தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊரடங்கு மற்றும் தடை உத்தரவு பாதிப்பால் ஏழை, எளிய மக்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக அனைத்து ரேஷன்கார்டுதாரருக்கும் ரூ.1000 நிவாரண உதவியுடன் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விலையில்லாமல் வழங்க உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 99 சதவீத ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.1000 நிவாரண தொகை வழங்கப்பட்டு விட்டது. ரேஷன்கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் மூலம் விலையில்லா அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.

அனைத்து ரேஷன்கடைகளிலும் நிவாரண தொகை பெற்றவர்களுக்கு விலையில்லா அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தபோதிலும் இன்னும் பல பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. சில பகுதிகளில் பாமாயில் வினியோகம் செய்யப்படவேயில்லை.

வேறு சில பகுதிகளில் சர்க்கரை வழங்கப்படாத நிலை உள்ளது. அரிசி வினியோகிக்கப்பட்ட போதிலும் வினியோகிக்கப்படும் அரிசி தரமற்றதாக இருக்கும் நிலை தொடருகிறது. ரேஷன்கடைகளில் தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்படுவதாக பரவலாக பொதுமக்கள் புகார் கூறினர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலெக்டரை சந்தித்து தரமற்ற ரேஷன் அரிசி வினியோகத்தை தவிர்க்குமாறு வலியுறுத்தினர். நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் அனைத்து ரேஷன்கடைகளுக்கும் தரமான அரிசி அனுப்பப்பட்டு இருப்பதாக ஆய்வுக்கு சென்று இருந்த எம்.எல்.ஏ.யிடம் தெரிவித்திருந்த போதிலும் தரமற்ற அரிசி வினியோகம் தொடருகிறது.

இது ஏழை, எளிய மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் பயனில்லாமல் போய் விடுகிறது. வெளிச்சந்தையில் அரிசி வாங்கமுடியாத நிலையில்தான் ரேஷன் அரிசியை நம்பி வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்கள் பசியாறி வருகின்றனர். அந்த அரிசியும் தரமில்லாமல் இருந்தால் எந்த நோக்கத்துக்காக அரசு விலையில்லா அரிசி வினியோகத்தை தொடங்கியுள்ளதோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் ரேஷன்கடைகளில் தரமான அரிசி வினியோகம் செய்ய வழங்கல் துறை மூலம் உடனடி நடவடிக்கை எடுப்பதுடன் ரேஷன்கடைகளில் இருப்பில் இருக்கும் தரமற்ற அரிசி மூடைகளை முடக்குவதற்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. தொடர்ந்து தரமற்ற அரிசி வினியோகிக்கப்பட்டால் பொதுமக்கள் சமூக விலகலை புறக்கணித்து போராடும் நிலை ஏற்பட்டு விடும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad