Type Here to Get Search Results !

3 நிற அட்டைகளை நெல்லையில் பொதுமக்கள் பயன்படுத்துவது எப்படி? - அதிகாரிகள் விளக்கம்

நெல்லையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3 நிற அட்டைகளை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்று பொதுமக்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதையும் மீறி பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே இதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வெளியே வருவதை ஒழுங்குபடுத்தும் வகையில் 3 நிற அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக மேலப்பாளையத்தில் பொதுமக்களுக்கு நேற்று இந்த அட்டைகள் வழங்கப்பட்டது.

full-width இதில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அட்டையில் குறிப்பிட்டு நாட்களில் மட்டுமே அவர்கள் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த அட்டையை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

பொதுமக்களுக்கு நீலம், சிவப்பு, பச்சை என 3 நிறங்களில் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது. இது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்லும் அனுமதி சீட்டு ஆகும்.

இதில் நீல நிற அட்டை வைத்திருப்போருக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். பச்சை நிற அட்டைதாரர்களுக்கு திங்கள் மற்றும் வியாழக்கிழமை மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

இந்த அட்டை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செல்லத்தக்கது. குறிப்பிட்ட நிற அட்டைதாரர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் மற்றும் நேரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மருத்துவ அவசரத்துக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். இந்த அட்டையை வைத்திருப்பவர் ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர அனுமதி அளிக்கப்படும். 15 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இந்த அட்டையை பயன்படுத்தி வெளியே வந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நடந்து செல்லும் போதும், வாகனத்தில் செல்லும் போதும், வாகனத்தை நிறுத்தும் இடம், பொருட்களை வாங்கும் போதும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இந்த அட்டையுடன் ஏதேனும் ஒரு அடையாள அட்டையையும் உடன் எடுத்து செல்ல வேண்டும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இதுதவிர மேலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

திருப்பத்தூரில் இருந்து ஆரஞ்சு பழங்களை வெளியூர்களுக்கு அனுப்ப முடியாமல் வியாபாரிகள் தவிப்பு - குளிர்சாதன வசதி ஏற்படுத்தித்தர கோரிக்கை
திருப்பத்தூரில் ஆரஞ்சு பழங்களை விற்பனை செய்முடியாமல் வியாபாரிகள் தவித்துவருகிறார்கள். இதனால் பழங்களை பாதுகாப்பாக வைக்க குளிர்சாதன வசதி ஏற்படுத்திதரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் தாலுகா பெரியகரம் கிராமத்தில் பழ மண்டிகள் உள்ளது. இங்கு மொத்தவியாபாரம் செய்யப்படுகிறது. தற்பொழுது ஆரஞ்சு பழ சீசன் ஆகும். இந்த சீசன் வருகிற ஜூன் மாதம் வரை நீடிக்கும். திருப்பத்தூர் பழ மண்டிக்கு மராட்டியம், அமராவதி போன்ற இடங்களில் இருந்து தினமும் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஆரஞ்சு பழங்கள் வந்துகொண்டிருந்தன. இந்தநிலையில் கொரோனா வைரஸ் காரணமாக பழ மண்டிக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே ஆரஞ்சு பழம் வருகிறது.

இங்கிருந்து சேலம், காஞ்சீபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக இங்கிருந்து லாரிகளில் அனுப்ப முடியாததால் ஆரஞ்சு பழம் பெருமளவில் தேக்கமடைந்து வீணாகி விட்டது. ஆரஞ்சு பழத்தில் கொரோனா வைரஸ் எதிர்ப்புக்கு விட்டமின் சி உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்ததால் நல்ல கிராக்கி இருக்கும். ஆனால் திருப்பத்தூரில் இருக்கும் 100-க்கும் மேற்பட்ட பழக்கடைகள் மூடப்பட்டதாலும், தள்ளுவண்டி கடைகளில் பழம் விற்க யாரும் வராததாலும் ஆரஞ்சு பழம் பெருமளவில் தேக்கம் அடைந்து கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனை கடைக்காரர்கள் வாங்கிச்சென்று ரூ.50 வரை விற்கிறார்கள்.

இதுகுறித்து மொத்த பழ விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் அன்வர் சுல்தான் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து செல்ல வேண்டிய லாரிகள் செல்லவில்லை. அதேபோல வெளிமாநிலங்களில் இருந்து வரவேண்டிய லாரிகளும் வர இயலவில்லை. தமிழக அரசு 12 மணி வரை பழக் கடைகளை திறக்கலாம் என்று கூறியபோதும் காலை 8 மணியோடு கடைகளை மூடவேண்டும் என போலீசார் கூறுகிறார்கள். இதனால் பெருமளவில் ஆரஞ்சு பழம் விற்க முடியவில்லை .

இதுமட்டுமின்றி இந்தப்பகுதியிலிருந்து ஆந்திரா, மராட்டியம், கர்நாடகா, தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு மாங்காய் எடுத்து செல்ல வேண்டும். மாங்காய்களை லாரிகளில் எடுத்து செல்ல இயலாத நிலை உள்ளது. நமது பகுதியில் சப்போட்டா அதிகளவில் விளைகிறது. அதனை பறிப்பதற்கு ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரஞ்சு மற்றும் இதர பழங்கள் மண்டிகளில் தேங்கியிருப்பதால், அதை பாதுகாப்பாக வைக்க அரசு சார்பில் 1,500 டன் குளிர்சாதன வசதி கொண்ட கிடங்கு ஏற்படுத்தி தரவேண்டும். இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் பயனடைவார்கள் எனக் கூறினார்.

தற்பொழுது பல டன் ஆரஞ்சுப்பழம் மண்டிக்கு கொண்டுவரப்பட்டு அதனை தரம்வாரியாக பிரிக்கவும், லாரிகளில் ஏற்றி இறக்கவும் ஆட்கள் வராததால் விற்பனை செய்யமுடியாமல் உள்ளது. எனவே பழத்தை லாரிகளில் எடுத்துச்செல்ல அரசு விதிகளை எளிமைப்படுத்தவும், பழம் விற்பனை செய்ய நேரத்தை ஒதுக்கித்தரவும் பழ வியாபாரிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறைந்த தொழிலாளர்களை கொண்டு ஆடைகள் தயாரிக்க அனுமதிக்க வேண்டும் - பிரதமருக்கு, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கடிதம்
திருப்பூரில் குறைந்த தொழிலாளர்களை கொண்டு ஆடைகள் தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று பிரதமருக்கு, ஆடை ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கடிதம் அனுப்பி உள்ளார். இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ராஜாசண்முகம். பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று நோயால் நாடு முழுவது முழுவதுமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ.26 ஆயிரம் கோடிக்கு கோடை, குளிர்கால ஆடைகளை தயாரித்து அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து உட்பட பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதன் மூலம் 6 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 2 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாக வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு தற்போது படிப்படியாக மீண்டு வரும் சீனா, மற்றும் வங்கதேசம், கம்போடியா, பின்னலாடை நிறுவனங்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு புதிய ஆர்டர்கள் பெறும் வகையில் மாதிரி ஆடைகளை தயாரித்து உலக பையர்களுக்கு அனுப்பி புதிய ஆர்டர்கள் பெற அனுமதி அளித்துள்ளது. இதனால்,அந்நாடுகளுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் இயங்கவில்லையெனில் அடுத்த 6 மாதங்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்க நேரிடும். இதை தவிர்க்க பின்னலாடை ஏற்றுமதி நிறுவங்கள் உலக பையர்களிடம் வரும் கோடை, குளிர்காலத்திற்கான ஆர்டர்களை பெற மாதிரி ஆடைகளை தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். இந்த ஆடைகளை வெளிநாட்டு பையர்களுக்கு அனுப்பி புதிய ஆர்டர்கள் பெற வாய்ப்பு உள்ளது. இதற்காக பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு குறைந்தளவு தொழிலாளர்களை வைத்து ஆடைகளை தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். மாதிரி ஆடைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி புதிய ஆர்டர்கள் பெறவில்லையெனில் வரும் 6 மாதங்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்காத சூழ்நிலை உள்ளது. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலையிழக்கும் அபாயம் உள்ளது. பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிறுவனங்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உணவுப்பொருட்கள் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த வடமாநில தொழிலாளர்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் இருப்பதால் இதில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தின் பல மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாநில தொழிலாளர்கள் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகிறார்கள். தொடக்கத்தில் பனியன் நிறுவனங்களில் வேலை செய்யவே திருப்பூர் நோக்கி படையெடுத்த வடமாநில தொழிலாளர்கள் தற்போது கிடைத்த வேலையை செய்யும் அளவுக்கு வந்து விட்டனர். சாதாரண டீக்கடை முதல் ஓட்டல், விடுதி, பல்பொருள் அங்காடி, கட்டிடவேலை, பெட்டிக்கடை, எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை, சாலையோரம் பொம்மைகள் விற்பது வரை எங்கு பார்த்தாலும் வடமாநில தொழிலாளர்களின் தலைகளையே காணமுடிகிறது.

அதுமட்டுமின்றி கோழிப்பண்ணை, அரிசி ஆலை, எண்ணெய் ஆலை, விசைத்தறி கூடங்களிலும் வடமாநிலத்தவர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். வடமாநிலத்தவர்கள் இல்லாமல் திருப்பூரில் தொழில்வளர்ச்சி இல்லை என்ற அளவுக்கு இவர்கள் நீக்கமற நிறைந்து விட்டார்கள்.

உலகம் முழுவதும் தற்போது கொரோனா அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் உள்பட அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டு விட்டன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி அவசர அவசரமாக புறப்பட்டு சென்று விட்டனர். ஆனால் வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர் செல்வதற்கு ரெயில் போக்குவரத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். ரெயில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் திருப்பூரிலேயே இருக்கிறார்கள்.

ஊரடங்கை அமல்படுத்தி 2 வாரங்களை கடந்து விட்டது. கையில் இருக்கும் பணம், உணவுப்பொருட்களை வைத்து சாப்பிட்டு வந்த வடமாநிலத்தவர்கள் தற்போது உணவுக்காக கலெக்டர் அலுவலகத்தின் கதவை தட்டி வருகிறார்கள். தொடக்கத்தில் ஒவ்வொரு தாலுகா வாரியாக மாவட்ட நிர்வாகம் தாசில்தார்களை நியமித்து வடமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்தனர். உணவுப்பொருட்கள் இல்லாதவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலமாக உணவுப்பொருட்களை கொண்டு சேர்த்தனர்.

வருவாய்த்துறையின் கணக்கெடுப்புப்படி பார்த்தால் மாவட்டத்தில் பீகாரை சேர்ந்தவர்கள் 42 ஆயிரத்து 106 பேரும், ஒடிசாவை சேர்ந்தவர்கள் 36 ஆயிரத்து 157 பேரும், உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் 10 ஆயிரத்து 722 பேரும், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் 11 ஆயிரத்து 930 பேரும், அசாமை சேர்ந்தவர்கள் 6 ஆயிரத்து 530 பேரும், மராட்டியத்தை சேர்ந்தவர்கள் 2 ஆயிரத்து 367 பேரும், பஞ்சாபை சேர்ந்தவர்கள் 949 பேரும், தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் 931 பேரும், கேரளாவை சேர்ந்தவர்கள் 1,695 பேரும், குஜராத்தை சேர்ந்தவர்கள் 735 பேரும், ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் 733 பேரும், மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் 2 ஆயிரத்து 414 பேரும், ஜார்கண்டை சேர்ந்தவர்கள் 4 ஆயிரத்து 965 பேரும், திரிபுரா, மணிப்பூர், மிசோரம், ஜம்மு, மேகாலயா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 1 லட்சத்து 28 ஆயிரத்து 665 பேர் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினருக்கு தலா 15 கிலோ அரிசி, 1 கிலோ சமையல் எண்ணெய், 1 கிலோ பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர உருளை கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் தன்னார்வ அமைப்பினர் உதவியோடு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் கணக்கெடுப்பு படி 50 சதவீதம் பேருக்கு மட்டுமே உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பனியன் நிறுவனத்தின் கீழ் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சம்பந்தப்பட்ட பனியன் நிறுவனத்தினர் அவர்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.

அவ்வாறு வழங்கப்பட்டும் கூட உணவுப்பொருட்கள் கிடைக்காமல் பட்டினியால் வடமாநிலத்தவர்கள் பல பகுதிகளில் தவித்து வருகிறார்கள். தங்களுக்கு உணவுப்பொருட்களை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் வந்து முறையிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை பல்லடம், கரைப்புதூர், வாழைத்தோட்டம், திருப்பூர் எல்.ஆர்.ஜி.அரசு பெண்கள் கல்லுரி பின்புறம் என பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும் என்று முறையிட்டனர். அவர்களின் பெயர் விவரங்களை குறிப்பிட்டு விரைவில் உணவுப்பொருட்கள் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் உணவுப்பொருட்கள் வேண்டி கலெக்டர் அலுவலகத்துக்கு வராத சூழ்நிலையில் தற்போது கடந்த 3 நாட்களாக அதிகப்படியானவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு படையெடுத்து வருகிறார்கள். அதிகாரிகள் கொடுத்த உணவுப்பொருட்கள் போதுமானதாக இல்லை என்றும், எங்களுக்கு கூடுதலாக உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் வடமாநிலத்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிகாரிகளின் கணக்கெடுப்பையும் தாண்டி வடமாநிலத்தவர்கள் திருப்பூர் பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு உணவுப்பொருட்களை வருவாய்த்துறையினர் கொடுத்து வந்தாலும் முறையாக அவர்களிடம் சென்று சேர்ந்ததா என்பது புரியாத புதிராக உள்ளது. பல பகுதிகளில் உணவுப்பொருட்களை வழங்கினாலும் கூட தங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கவில்லை என்று வடமாநிலத்தவர்கள் அதிகாரிகளிடம் மீண்டும், மீண்டும் புகார் தெரிவித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் உணவுப்பொருட்கள் வினியோகம்செய்யும் அதிகாரிகள் மிகப்பெரிய குழப்பத்தில் சிக்கித்தவித்து வருகிறார்கள். வடமாநிலத்தவர்களுக்கு உணவுப்பொருட்களை கொண்டு சேர்ப்பது அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

ஊரடங்கு மேலும் நீட்டிக்கும் பட்சத்தில் வடமாநிலத்தவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்குவது மாவட்ட நிர்வாகத்துக்கும் சவாலான பணியாகவே அமையும். திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 50 ஆயிரம் வடமாநிலத்தவர்கள் இருப்பதாக வருவாய்த்துறை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இப்போதே உணவுப்பொருட்கள் கிடைக்காமல் பசியோடு ஆங்காங்கே வீதியில் வடமாநிலத்தவர்கள் சுற்றித்திரிந்து வருகிறார்கள். அவர்களின் வயிற்றுத்தீ அணைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உணவுப்பொருட்கள் கிடைக்காமல் பட்டினியால் தவிக்கும்போது வடமாநிலத்தவர்கள் வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடவும் வாய்ப்பு இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி வடமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை தொடர்ச்சியாக வழங்கினால் மட்டுமே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியும். இல்லையென்றால் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களுக்கும் பிரச்சினை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad