ஏ.டி.எம் மூலம் கொரோனா பரவல்: 3 பேர் பாதிப்பு; காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை

இந்திய இராணுவ வீரர்கள் மூவருக்கு ஏ.டி.எம் மூலம் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதுவரை 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் பரோடாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 இராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மூன்று பேருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சக வீரர்கள் உட்பட, 28 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இவர்களுக்கு கொரோனா எப்படி பரவியது என்பது தொடர்பாக நடந்த விசாரணையில், மூவரும் ஒரே நாளில் ஏ.டி.எம்மில் பணம் எடுத்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

எனவே அந்த ஏ.டி.எம் சீலிடப்பட்டு தூய்மைபடுத்தப்பட்டுள்ளது. அந்த ஏ.டிஎம்-யை பயன்படுத்திய அனைவரையும், தாங்களாகவே தனிமைப்படுத்தி கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இதேபோல், ஜம்மு - காஷ்மீரின் குப்வாராவில் உள்ள பட்டாலியனில் நர்ஸிங் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த மேலும் ஒரு இராணுவ வீரருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர், டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பிலிருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கோரிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நகரில் கோரிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் சம்பவ பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  இதில் இன்று காலை இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.  பிற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url