தமிழகத்தில் மே 3-ம் தேதிவரை முழு ஊரடங்கு: எந்த தளர்வுகளும் கிடையாது

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. 
கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  கடந்த 14ந்தேதி வரை 21 நாட்களுக்கு இந்த உத்தரவு நடைமுறையில் இருந்தது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது.  அத்தியாவசிய தேவைகளான பால், மருந்து, மளிகை, மருந்து மற்றும் உணவு பொருட்களுக்கான கடைகள் தவிர்த்து பிற கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டதுடன், அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.

இந்தநிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுக்களோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, ஊரடங்கு உத்தரவை ஒரு சில துறைகளுக்கு தளர்த்துவது குறித்த நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிந்துரையை வழங்கினர். ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தநிலையில், தமிழகம் முழுவதும் மே 3-ம் தேதிவரை முழு ஊரடங்கு தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள எந்தவித தளர்வுகளும் தமிழகத்தில் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நோய்த் தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டியுள்ளதால், மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் படி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள 3.5.2020-ம் தேதி வரை தொடர்ந்து கடைபிடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அத்தியாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கெனவே அரசால் அளிக்கப்பட்ட விதி விலக்கு தொடரும். நோய்த் தொற்றின் தன்மையை மீண்டும் ஆராய்ந்து, நோய்த் தொற்று குறைந்தால் வல்லுநர் குழுவின் ஆலோசனையினை பெற்று நிலைமைக்கு ஏற்றாற்போல தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url