தமிழகத்தில் ஊரடங்கிற்குப் பின்னரும் 77 பேருக்கு நேரடி கொரோனா தொற்று; சமூகப் பரவல்

கடந்த 12ம் தேதி முதல் தமிழகத்தில் 459 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 382 பேர் கொரோனா தொற்று பெற்றவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததால் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால், 77 பேர் நேரடியாக புதிதாக தொற்று பெற்றவர்கள் ஆவார்கள்.
இந்த 77 பேருக்கு ஊரடங்கின் 21 நாட்களுக்கு பிறகும் நேரடி தொற்று பெற்றிருப்பது ஆபத்தை உணர்த்தும் செய்தியாகும்.

கொரோனா பாதிப்பு தொடங்கிய நேரத்தில் யார் எந்த நாட்டுக்கு சென்று வந்ததன் மூலம் தொற்று ஏற்பட்டது என்ற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டது. ஆனால் அதன் பிறகு தகவல்கள் வெளிப்படையாக இல்லை.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு வெளிநாடு செல்பவர்கள், வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் யாரும் கிடையாது. தமிழ்நாட்டிலும் வெளியூர் செல்பவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு. மாவட்ட நிர்வாகத்தின் பாஸ் பெற்று திருமணம், இறப்பு, மருத்தவ அவசர தேவைகளுக்கு மட்டுமே செல்ல முடியும்.

வைரஸ் உடலில் வந்து அறிகுறிகள் தெரிய அதிகபட்சம் 14 நாட்கள் ஆகும். மிக மிக அரிதான நேரத்தில் மட்டுமே 14 நாட்களுக்கு மேல் ஆகும். ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 21 நாட்கள் கழித்து ஏப்ரல் 12ம் தேதி 16 பேருக்கு நேரடியாக தொற்று ஏற்பட்டுள்ளது. 13ம் தேதி 9 பேருக்கு, 14ம் தேதி ஒருவருக்கு, 15ம் தேதி 16 பேருக்கு, 16ம் தேதி 7 பேருக்கு, 17ம் தேதி 15 பேருக்கு நேரடி தொற்று உறுதியானது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 28 நாட்கள் கழித்தும்19ம் தேதி 13 பேருக்கு நேரடியாக தொற்று ஏற்பட்டதாக சுகாதாரத்துறை கூறுகிறது.

77 பேரில் 17 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், 11 பேர் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள், திருவள்ளூர், நாகப்பட்டினம், மதுரையிலும் தலா 7 பேர் உள்ளனர். இவ்விபரங்கள் கூடுதல் எச்சரிக்கை தேவை என உணர்த்துகின்றன.

மெடிக்கலில் பணியாற்றிய 2 பெண்களுக்கு கொரோனா தொற்று
அரியலூரில் மெடிக்கலில் வேலை பார்த்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அவர்கள் வேலைபார்த்த மெடிக்கலின் உரிமையாளர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் ஆவார். இவரை தனிமைப்படுத்தி சோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என விடுவித்தனர்.

இந்நிலையில் அவரது கடையில் வேலை பார்த்த செந்துறையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், ராயம்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் உறவினர்கள் 10 பேரையும் தனிமைப்படுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மெடிக்கலில் வேலை பார்த்த பெண்களுக்கு தொற்று உறுதி ஆகியிருப்பதால் அரியலூர் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url