போலீஸ் ஏட்டுக்கு கொரோனா: பெருங்குடியில் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எல்லையை மூட வேண்டும் - கலெக்டர்; நாகை மாவட்டத்தில் 1,358 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை

போலீஸ் ஏட்டுக்கு கொரோனா உறுதியான நிலையில் பெருங்குடியில் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எல்லையை மூட கலெக்டர் உத்தரவிட்டார்.
மதுரை அருகே பெருங்குடியை சேர்ந்த போலீஸ் ஏட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையொட்டி ஏட்டு வசித்து வந்த குடியிருப்பு பகுதியை சுற்றிலும் 6 இடங்களில் தகரம் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டு மூடப்பட்டது. இந்த நிலையில் நேற்று கலெக்டர் வினய் அந்த பகுதியை பார்வையிட்டார். அப்போது அவர் பெருங்குடி ஊராட்சியில் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எல்லை மூடப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.

வெளி நபர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது. அதே போல உள்ளே இருந்து யாரும் வெளியே செல்லக் கூடாது. அதை கண்காணிக்கப்பட வேண்டும். வீதிகளில் வாகனங்கள் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும். 3 நாட்கள் தொடர்ந்து மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கேட்பவர்களுக்கு தன்னார்வ தொண்டர்கள் மூலம் வாங்கி கொடுக்க வேண்டும். அதற்காக அனுமதி பெற்ற வாகனத்தை பயன்படுத்தி கொள்ளலாம். ஒலிபெருக்கி மூலம் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக சோப்பு கொண்டு கை கழுவுவதை கட்டாயப்படுத்த வேண்டும் என்றார்.

ஆய்வின்போது திருப்பரங்குன்றம் தாசில்தார் நாகராஜன், திருப்பரங்குன்றம் யூனியன் ஆணையாளர் ஆசிக், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன், டாக்டர் சசிக்குமார், சுகாதார வட்டார மேற்பார்வையாளர் தங்கச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் பத்மா முருகேசன், ஊராட்சி செயலர் அழகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவுப்படி சுமார் 1 மணி நேரத்தில் பெருங்குடியில் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தடுப்புகள் போடப்பட்டது. மேலும் வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

காஞ்சீபுரத்தில் நலவாரிய அடையாள அட்டை வைத்துள்ள தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை - கலெக்டர் தகவல்
தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரிய அடையாள அட்டை வைத்திருக்கும் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) கீழ் செயல்பட்டு வரும் தூய்மை பணிபுரிவோர் நலவாரிய மூலமாக 2008-ம் ஆண்டில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்த தூய்மை பணிபுரிவோர் நலவாரிய அடையாள அட்டையை வைத்துள்ள பணியாளர்கள் தற்போது பணிபுரிந்து வந்தாலோ அல்லது ஓய்வு பெற்று இருந்தாலோ கொரோனா நிவாரண உதவிதொகையாக ரூ.1000 பெறலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரில் வரக்கூடாது

இந்த நிவாரண உதவித்தொகையினை பெறுவதற்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள் அல்லது ஓய்வு பெற்றவர்கள் தாட்கோ அலுவலகத்தில் மாவட்ட மேலாளர் மா.கு.தேவசுந்தரியை 04427237842 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் 9445029462, 9003372688 என்ற எண்ணுக்கும் வாட்ஸ்-அப் மூலம் நலவாரிய அடையாள அட்டையின் விவரத்தை படம் எடுத்து அனுப்பிவிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இதுசம்பந்தமாக எவரும் அலுவலகத்திற்கு நேரில் வரக்கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவல் காஞ்சீபுரம் கலெக்டர் பா.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உழவர், சமூக பாதுகாப்பு திட்டங்களின்கீழ் 11,687 பேருக்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு கலெக்டர் தகவல்
உழவர் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 687 பேருக்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உடனடியாக அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடலூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு அட்டை இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு நலிந்தோர் நலத்திட்டத்தின் கீழ் குடும்ப தலைவர் இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணத்திற்கான நிவாரண தொகை கோரி நிலுவையில் இருந்த மனுதாரர்களுக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 344 பேருக்கு ரூ.68 லட்சத்து 80 ஆயிரம் நிவாரண தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு

இதை மேற்கண்ட மனுதாரர்கள் அவர்களின் வங்கி கணக்கில் இருந்து தொகையை எடுத்துக்கொள்ளலாம். மேலும் தற்போது முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உழவர் அடையாள அட்டை பெற்றுள்ள விவசாய குடும்பத்திற்கு கல்வி உதவித்தொகை, உறுப்பினர் திருமண உதவித்தொகை, உறுப்பினரை சார்ந்து வாழும் நபருக்கு திருமண உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, தற்காலிக இயலாமை உதவித்தொகை ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடு நடப்பு ஆண்டிற்கு ரூ.13 கோடியே 28 லட்சத்து 31 ஆயிரம் வரப்பெற்றுள்ளது.

வங்கி கணக்கு

இதனால் இந்த திட்டத்தின் கீழ் மனு கொடுத்து, நிலுவையில் உள்ள 11 ஆயிரத்து 343 பேர் பயன் பெறும் வகையில் இந்த மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவுக்கும் இந்த தொகை பிரித்து தற்போது வழங்கப்பட்டு உள்ளது. இதை உடனடியாக சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கிட சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தொகையும் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். ஆகவே இந்த உதவித்தொகையை பயனாளிகள் ஒரு வாரத்திற்கு பிறகு வங்கிகளுக்கு சென்று எடுத்து பயன்பெறலாம். மேலும் சந்தேகம் இருப்பின் சம்பந்தப்பட்ட சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்களை நேரில் அணுகலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம் - கலெக்டர் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 225 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.

ராமநாதபுரம் நகரசபை அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் களபணியாற்றும் அரசுதுறைகளை சார்ந்த பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்திட வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீரை கலெக்்டர் வீரராகவராவ் வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மாவட்டத்தில் முதல்-அமைச்சர் உத்தரவின்படி கொரோனா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களில் 15 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நோய் தொற்று உள்ள பகுதிகள் முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இலவச தொலைபேசி எண்ணிற்கு வந்த 479 அழைப்புகளில் மருத்துவ உதவி, உணவு தேவை, சுகாதார நடவடிக்கை போன்ற கோரிக்கைகள், உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக இதுவரை 2 ஆயிரத்து 702 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4 ஆயிரத்து 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை கடைபிடிக்காத 225 கடைகளுக்கு அபராதம் விதிக் கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் எல்லை பகுதிகள் சீல்வைக்கப்பட்டு 27 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனை சாவடிகளை கடந்து யாரும் உள்ளே வராத வகையில் காவல்துறை, வருவாய்த்துறையுடன் இணைந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து மாவட்டத்திற்குள் நுழைந்த 298 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் தூய்மை பணி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முக கவசம், கையுறை போன்றவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் முககவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தனித்திருத்தல் போன்றவைகளை கடைபிடித்தால் கொரோனா பாதிப்பில் இருந்து நாமும், நம்மை சுற்றி உள்ளவர்களும் பாதுகாப்பாக இருக்கலாம். இவ்வாறு கூறினார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் - கலெக்டர் வழங்கினார்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை கலெக்டர் பா.பொன்னையா வழங்கினார்.

கொரோனா வைரஸ் பாதிப்பினை கட்டுப்படுத்திட தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாவட்டத்தில் அத்தியாவசியப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காஞ்சீபுரம் மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துத் துறை சார்ந்த பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மாத்திரைகளை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது, கொரோனா நோய் பரவாமல் தடுக்கும் விதமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக இந்த மாத்திரையை தினமும் ஒன்று வீதம் 10 நாட்களுக்கு அனைத்துத்துறை அலுவலர்களும் தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

தமிழக அரசின் சீரிய நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து பாடுபட்டு வரும் அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில்கொரோனா வார்டு டாக்டர், செவிலியர்களுக்கு சிறப்பான உணவு- தங்கும் வசதிகலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு சிறப்பான உணவும், தங்கும் வசதியும் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-

கொரோனா சிகிச்சை மையம்

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதில் 600-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள், செவிலியர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், செவிலியர்கள் 7 நாட்கள் பணி, 7 நாட்கள் தனிமை கண்காணிப்பு, 7 நாட்கள் ஓய்வு என்ற அடிப்படையில் பணி செய்து வருகின்றனர். பணியிலும், தனிமையிலும் இருக்கும் 14 நாட்களுக்கு அவர்களுக்கு உணவு வழங்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில், மாவட்ட நிர்வாகம் மூலம் உணவு வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.

நெல்லை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மையமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் இதர களப்பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்புப்பணியில் இருக்கும்போதும், அதில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்கும் வகையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் காலத்திலும் சிறப்பான முறையில் தங்கும் வசதியும், உணவும் அளித்திடவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சிறப்பான உணவு

இதையொட்டி அவர்கள் அனைவருக்கும் சிறப்பான முறையில் தங்கும் வசதியும், உணவும் வழங்கிட, கலெக்டர் தலைமையில் டீன் ரவிச்சந்திரன் மற்றும் உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமண அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் ஆகியோர் கொண்ட குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

நெல்லையில் உள்ள 2 சிறந்த சைவ உணவகங்கள் மற்றும் ஒரு சிறந்த அசைவ உணவகம் ஆகியவற்றில் இருந்து கொரோனா நோய் தடுப்பு வார்டில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் இதர களப்பணியாளர்கள் தனிமைப்படுத்தப்படும் பணியாளர்கள் அனைவருக்கும் 3 வேளையும் சிறப்பான உணவு பெற்று வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்து துரித நடவடிக்கை எடுத்து மாவட்ட நிர்வாகம் மூலம் கடந்த 1 மாதமாக டாக்டர்களுக்கு தங்கும் இடமும், உணவும் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு குறைய மக்களின் முழு ஒத்துழைப்பு அவசியம் - கலெக்டர் வேண்டுகோள்
மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைய பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து கலெக்டர் கண்ணன் மேலும் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 பேர் சிகிச்சை முடிந்து வீடி திரும்பியுள்ளனர். ராஜபாளையத்தில் கொரோனா பாதித்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்தால் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருக்கும். மாவட்டத்தில் சமூக தொற்று மூலம் யாருக்கும் கொரோனா பரவவில்லை என அறியப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களின் தொடர்புடையவர்களுக்கு மட்டுமே தொற்று பரவியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் தற்போது கொரோனா பாதிப்பில் சிவப்பு மண்டலமாக உள்ளது. தொடர்ந்து 14 நாட்களுக்கு புதிதாக அறியப்படவில்லை என்றால் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்படும். இதேபோல் 28 நாட்களுக்கு யாருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்றால் பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பட்டாசு தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பட்டாசு தொழிற்சாலைகளை இயக்க அரசிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ராஜபாளையம் மற்றும் வத்திராயிருப்பு பகுதியில் வசித்து வரும் மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கலெக்டர் வழங்கினார்.

இன்று முதல் காய்கறி சந்தைகள், மளிகை கடைகள் செயல்படும் - கலெக்டர் ராமன் அறிவிப்பு
சேலம் மாநகரில் முழு ஊரடங்கு உத்தரவு நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி இன்று முதல் காய்கறி சந்தைகள், மளிகை கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் ராமன் அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், இந்த நோய் தொற்று சமூக பரவலாக மாறாமல் இருக்கவும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதாவது கடந்த 25, 26-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. 26-ந் தேதி முதல் நேற்று வரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தது.

இதனால் முக்கிய சாலைகள் அனைத்தும் வாகன போக்குவரத்து எதுவுமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் அனைத்து கடைகளும், காய்கறி சந்தைகளும் மூடப்பட்டு இருந்தன. மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகரை பொறுத்தவரை நேற்று 4-வது நாளாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதேசமயம் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த பொதுமக்களை போலீசார் எச்சரிக்கை செய்தனர். ஹெல்மெட் மற்றும் முக கவசம் அணியாமல் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வெளியே வந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

முழு ஊரடங்கின் 4-வது நாளான நேற்று சேலத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி, மளிகை கடைகள் எதுவும் செயல்படவில்லை. இதனால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. அப்போது பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். முழு ஊரடங்கால் சேலம் மாநகர் முழுவதும் கடந்த 4 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்டன.

இந்த நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு நேற்று இரவுடன் நிறைவடைந்ததையொட்டி இன்று (புதன்கிழமை) முதல் காய்கறி சந்தைகள் மற்றும் மளிகை கடைகள் வழக்கம் போல் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் புறநகர் பகுதியில் கடந்த 25 மற்றும் 26-ந் தேதி ஆகிய 2 நாட்களும், சேலம் மாநகராட்சி பகுதியில் 25 முதல் 28- தேதி வரையிலும் முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. இந்த நாட்களில் பொதுமக்கள் வெளியே வருவதை முற்றிலும் தவிர்த்தனர். இதனால் கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கும் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

முழு ஊரடங்கு உத்தரவு இன்று (அதாவது நேற்று) முடிவடைந்ததால் உழவர் சந்தைகள், காய்கறிகள் மற்றும் மளிகை கடைகள் நாளை (இன்று) முதல் அரசு அறிவித்தபடி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படலாம். அப்போது பொதுமக்கள் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும் முக கவசம் அணியாமல் யாரும் வெளியே வரக்கூடாது. அவ்வாறு வருவது தெரியவந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் வினியோகம் செய்யப்படும். மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் 250 நடமாடும் உழவர் சந்தைகள் மூலம் காய்கறிகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அவர்களது குடும்பத்தினரையும், உறவினர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் காவல்துறை மற்றும் சிறைத்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கும் நோய்த்தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் யாரேனும் சேலம் மாவட்டத்திற்கு வந்தால் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும். சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறவில்லை.

கேரளாவில் வீட்டை விட்டு வெளியே செல்லும் நபர்கள் குடைகளை பிடித்தபடி செல்கிறார்கள். அவர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க இவ்வாறு செல்கிறார்கள். இதனால் அங்கு கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல சேலம் மாவட்ட பொதுமக்கள் தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க குடைகளை பிடித்தவாறு செல்லலாம்.

நாகை மாவட்டத்தில்1,358 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைகலெக்டர் தகவல்
நாகை மாவட்டத்தில் இதுவரை 1,358 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட் டுள்ளதாக கலெக்டர் பிரவீன் நாயர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரத்த மாதிரி பரிசோதனை

நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று இருக்கும் என சந்தேகத்தின் படி, இதுவரை 1,358 பேரின் ரத்த மாதிரிகள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் 42 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

காசி சென்று திரும்பிய வேளாங்கண்ணியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அறிக்கை வந்துள்ளது. இந்த இரண்டு நபர்களையும் சேர்த்து இதுவரை 44 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 22 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 1,298 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 18 பேருக்கு பரிசோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வசிப்பிடங்களாக மாவட்டம் முழுவதும் 13 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அத்தியாவசியமான பொருட்களை வீடுவீடாக சென்று வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளில் 50 மருத்துவர்கள், 40 செவிலியர்கள், 133 சுகாதார ஆய்வாளர்கள், 600 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 200 போலீசார் மூலம் வீட்டுக்கு வீடு சென்று கொரோனா பரவுதலுக்கான அறிகுறிகளை விசாரித்து மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

3,383 குடும்பங்கள்

மாவட்டத்தில் இதுவரை 3,383 குடும்பங்கள் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு இருந்தனர். இவர்களது நடமாட்டம் 28 நாட்களுக்கு தடை செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 68 ஆயிரத்து 6 ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 4 லட்சத்து 53 ஆயிரத்து 872 ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன. மாவட்டத்தின் அனைத்து நகராட்சி மற்றும் சில பேரூராட்சிகளில் வீட்டுக்கு வீடு ரூ.100 விலையுள்ள காய்கறி தொகுப்புகள் வேளாண்மை துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad