Type Here to Get Search Results !

சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் நாளை மாலை 5 மணி வரை கடைகள் இயங்க அனுமதி; கோயம்பேடு சந்தையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் நாளை மாலை 5 மணி வரை கடைகள் இயங்க அனுமதி
சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் நாளை ஒரு நாள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு, வருகிற மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதத்திற்கும் கூடுதலாக ஆகிவிட்ட போதிலும் கொரோனா பரவுவதை தடுக்க முடியவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மக்கள் பல இடங்களில் வெளியே நடமாடுவதும், மார்க்கெட், கடைகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்து கொள்வதுமே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

இதனை அடுத்து, சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளிலும், ஊரடங்கு முழுமையாக 26-4-2020 (கடந்த ஞாயிறு) காலை 6 மணி முதல் 29-4-2020 இன்றிரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அமலானது இன்றிரவு முடிவடைய உள்ளது.  இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் நாளை ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை காய்கறி, மளிகை கடைகள் இயங்க அனுமதி அளித்து உள்ளார்.  இதனால் மக்கள் அவசரமின்றி, முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை வாங்கி செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இதன்பின்னர் மே 1ந்தேதி முதல் சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மாநகராட்சிகளில் வழக்கம் போல் காலை 6 மணி முதல் 1 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் கொரோனா பாதிப்பு 7 ஆக உயர்வு; பொதுமக்கள் வர தடை
ஆசியாவிலேயே 2வது பெரிய மார்க்கெட்டான சென்னை கோயம்பேடு சந்தையில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான காய்கறி கடைகள், பழங்கள், பூ கடைகள் உள்ளன.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோயம்பேடு சந்தையில் நேற்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.  இதனால், சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக சி.எம்.டி.ஏ. நேற்று தெரிவித்திருந்தது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058-ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 673 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சென்னை முதல் முறையாக மார்ச் 18-ஆம் தேதி டெல்லியில் இருந்து ரயிலில் மூலம் வந்த வடமாநில வாலிபருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 2058 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில், 32.7 சதவீதமாகும். சென்னையில் நேற்று மட்டும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே சென்னை கோயம்பேடு மார்கெட்டில் உள்ள வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் 4 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மேலும் மூவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. காய்கறி வியாபாரி, பூ வியாபாரி, பழ வியாபாரி, கூலித்தொழிலாளிகள் என கோயம்பேடு மார்கெட்டில் இயங்கி வந்தவர்கள் என்பதால் இவர்களுடன் மறைமுகமான தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கண்காணிப்புக்குள் கொண்டு வருவது சவாலாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றிய சி.எம்.டி.ஏ. வெளியிட்ட அறிவிப்பில், கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனை மட்டுமே நடைபெறும்.  பொதுமக்கள் சந்தைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.  சில்லறை வியாபாரிகள் அதிகாலை முதல் காலை 7.30 மணி வரை மட்டுமே காய்கறிகளை வாங்க அனுமதிக்கப்படும். நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மாதவரம் பேருந்து நிலையத்தில் பூ மற்றும் பழ சந்தை இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad