“எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருங்கள்” கடற்படைக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்








புதுடெல்லி,

டெல்லியில், இந்திய கடற்படை உயர் அதிகாரிகள் கருத்தரங்கம் கடந்த 24-ந் தேதி தொடங்கியது. அதில், இந்திய கடற்படையின் தயார்நிலை பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீன கடற்படையின் நடமாட்டம் அதிகரித்து இருப்பது பற்றியும், தெற்கு சீனக்கடலில் அதன் இருப்பு பற்றியும், தனது ஒட்டுமொத்த ஆதிக்கத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது பற்றியும் இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

நிர்மலா சீதாராமன்

இந்த கருத்தரங்கில், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

நமது அண்டை நாட்டு கடல் பகுதியில் சமீபகாலமாக எதிர்மறை நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதை கருத்தில்கொண்டு, நமது கடற்படை எந்த சவாலையும் எதிர்கொள்ளும்வகையில், எப்போதும் தயார்நிலையிலும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.

கப்பல் மூலமாக ஹெலிகாப்டர்கள் கொண்டு செல்வதில் உள்ள குறைபாடுகள் விரைவில் களையப்படும்.

கடந்த ஓராண்டாகவே, கடற்படை மிகுந்த தயார்நிலையில் இருப்பதை நான் அறிவேன். தெற்கு சீன கடலில் இருந்து பாரசீக வளைகுடா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்வரை கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், விமானங்கள் ஆகியவற்றை நிறுத்தி இருக்கிறது.

கடற்கொள்ளை

ஏடன் வளைகுடா பகுதியில், கடற்கொள்ளைகளை ஒடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த ஆண்டு, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாட்டு கடற்படைகளுடன் ‘மலபார் கூட்டு பயிற்சி‘ வெற்றிகரமாக நடந்தது. அதுபோல், அடுத்த ஆண்டு, போர்ட் பிளேரில் ‘மிலன் கூட்டு பயிற்சி‘ என்ற ஒத்திகை நடைபெறும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url