Type Here to Get Search Results !

நுகர்வோரை பாதுகாக்க புதிய சட்டம் பிரதமர் மோடி தகவல்








புதுடெல்லி,

நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கருத்தரங்கு ஒன்று டெல்லியில் நேற்று நடந்தது. கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த சுமார் 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

புதிய சட்டம்

நாட்டின் தேவை மற்றும் வியாபார நடைமுறைகளை கருத்தில் கொண்டு புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை விரைவில் கொண்டு வர திட்டம் வகுத்து வருகிறோம். இந்த சட்டம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வளத்துக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கும்.

குறிப்பாக நுகர்வோரை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்க இந்த சட்டத்தில் வழிமுறைகள் உருவாக்கப்படும். மேலும் நுகர்வோரின் குறைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்காக நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஒரு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-க்கு பதிலாக கொண்டு வரப்படும் இந்த புதிய சட்டத்தில், நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக 2015-ம் ஆண்டு ஐ.நா. வெளியிட்ட வழிகாட்டுதல்கள் அனைத்தும் இணைக்கப்பட்டு இருக்கும். அந்தவகையில் அரசின் முக்கியமான முன்னுரிமைகளில் நுகர்வோர் பாதுகாப்பும் அடங்கியிருக்கும்.

எல்.இ.டி. விளக்குகள்

புதிய ரியல் எஸ்டேட் சட்டம், உஜ்வாலா திட்டம், நேரடி மானிய திட்டம் என நுகர்வோர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கடந்த 3½ ஆண்டுகளில் நிறைவேற்றி இருக்கிறது. அந்தவகையில் வாங்குவோரின் நலன்களை பாதுகாப்பதற்காக புதிய ரியல் எஸ்டேட் சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த சட்டம் கட்டுமான நிறுவனங்களின் ஏகபோக உரிமையில் இருந்து பயனாளிகளை பாதுகாக்கிறது.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் எல்.இ.டி. விளக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு சேமிக்கப்பட்டு இருப்பதுடன், மின் தேவையும் குறைக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.57 ஆயிரம் கோடி சேமிப்பு

மேலும் ஜன் ஆசாதி பரியோஜனா திட்டம் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. 500 வகையான மருந்துகள் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் சேர்த்து அவற்றின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

நேரடி மானிய திட்டம் மூலம் சமையல் எரிவாயு மானியம் நுகர்வோரின் வங்கி கணக்கிலேயே நேரடியாக செலுத்தப்படுவதால், ரூ.57 ஆயிரம் கோடி சேமிப்புக்கு வழி ஏற்பட்டு உள்ளது.

ஜி.எஸ்.டி.யால் விலை குறையும்

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி.எஸ்.டி. சட்டம் நாடு முழுவதும் ஒரு புதிய வியாபார கலாசாரத்தை கொண்டு வந்துள்ளது. இது நுகர்வோருக்கு மட்டுமே நீண்ட கால அடிப்படையில் பலனளிக்கும். நுகர்வோரிடம் இந்த சட்டம் குறித்த தெளிவு இருப்பதால், அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. பொருட்கள் வாங்கும் போது பெறப்படும் ரசீதுகள் மூலம், மத்திய, மாநில அரசுகளுக்கு தாங்கள் கொடுக்கும் வரியை அவர்களால் அறிய முடிகிறது.

நிறுவனங்களுக்கு இடையே போட்டியை ஜி.எஸ்.டி. உருவாக்கும். இதன் மூலம் பொருட்களின் விலை குறைவதால் ஏழைகள் மற்றும் நடுத்தர நுகர்வோர் பயன்பெறுவார்கள். இதைப்போல பொருட்களின் போக்குவரத்தில் நேரம் மிச்சமாவதாலும் ஏற்படும் விலை குறைவு நுகர்வோரை சென்றடையும்.

பணவீக்கம் குறைவு

ஜி.எஸ்.டி. மூலம் ஏராளமான மறைமுக மற்றும் மறைக்கப்பட்ட வரிகள் ஒழிக்கப்பட்டு உள்ளது. எனவே ஜி.எஸ்.டி.யின் மிகப்பெரிய பயனாளிகள் நடுத்தர வர்க்கத்தினரும், நுகர்வோருமே ஆவர்.

கடந்த 3 ஆண்டுகளில் பணவீக்கம் கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதுவும் கூட நுகர்வோரின் சேமிப்புக்கு உதவியுள்ளது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இந்த கருத்தரங்கில் மத்திய மந்திரிகள் ராம்விலாஸ் பஸ்வான், சி.ஆர்.சவுத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad