Type Here to Get Search Results !

இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம் ஹர்திக் பாண்டியா...







நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த ஒருநாள் போட்டித் தொடரின் மூலமாக இந்திய அணிக்கு கிடைத்த விலைமதிக்க முடியாத பொக்கிஷம் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா என்று கேப்டன் கோஹ்லி பாராட்டி உள்ளார். இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளிடையே மொத்தம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றிய இந்தியா, பெங்களூரிவில் நடந்த 4வது போட்டியில் எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்தது. எனினும், நாக்பூரில் நடந்த 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அபாரமாக வென்று 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதுடன் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதலித்துக்கு முன்னேறி அசத்தியது. 

இந்த தொடரில் அதிரடியாக விளையாடி 222 ரன் குவித்ததுடன், 6 விக்கெட்டும் வீழ்த்தி ஆல் ரவுண்டராக ஜொலித்த இளம் வீரர் ஹர்திக் பாண்டியா தொடர் நாயகன் விருது பெற்றார். பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெற்ற வெற்றி குறித்து கேப்டன் கோஹ்லி கூறியதாவது: இந்த தொடரின் மூலமாக நமக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் ஹர்திக் தான். மிகவும் நெருக்கடியான கட்டங்களிலும் பதற்றமின்றி விளையாடி ரன் குவித்ததுடன், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினார். அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதில் சிரமத்தை எதிர்கொண்டாலும், திறமையான வீரர்கள் அதிகம் இருப்பது நமது பலத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இது சாதகமான விஷயம் தான்.

வேகப் பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர், பூம்ரா, ஷமி, உமேஷ் ஆகியோரும் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை அவர்கள் சரியாக பயன்படுத்தினர். சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப், சாஹல் பங்களிப்பும் முக்கியமானது. தொடர்ச்சியாக 6வது இருதரப்பு தொடரை வென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, இந்த தொடரில் நான்கு போட்டிகளில் இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வெற்றியை வசப்படுத்தியது மிகவும் திருப்தியாக உள்ளது. இதில் அணி நிர்வாகத்தின் பங்களிப்பும் அதிகம். தொடரை ஏற்கனவே வென்றுவிட்ட நிலையிலும், எஞ்சியுள்ள போட்டிகளில் வீரர்கள் முழு உத்வேகத்துடன் விளையாடியதற்கு அவர்கள் கொடுத்த ஊக்கமே காரணம். இவ்வாறு கோஹ்லி கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad