சுற்றுலா பட்டியலில் இருந்து தாஜ்மகால் பெயரை நீக்குவதா?





சென்னை: தாஜ்மகாலை சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து மத்தியில் ஆளும் பாஜ அரசு நீக்கியிருப்பது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது என நாராயணசாமி கூறினார். புதுவை முதல்வர் நாராயணசாமி நேற்று மாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தாஜ்மகாலை சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து மத்தியில் ஆளும் பாஜ அரசு நீக்கியிருப்பது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாஜ மதவாத அரசியல் பின்னணியில் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் இதுவரையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என அனைவரும் ஒன்று பட்டு சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு. ஆனால் அதை கெடுக்கும் விதத்தில் மதவாத அரசியலை இந்திய மக்களிடம் திணிக்கும் முயற்சியில் பாஜ ஈடுபட்டு வருகிறது. 

ஆனால் பாஜவின் இந்த முயற்சிக்கு இந்திய மக்கள் ஆதரவு அளிக்க மாட்டார்கள். பாஜவின் இந்த மதவாத அரசியலை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும். விடுதலை சிறுதைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: உத்தரப்பிரதேச மாநில சுற்றுலா தலங்கள் பட்டியலிலிருந்து தாஜ்மகாலை பாஜக அரசு நீக்கியுள்ளது. அரசின் சுற்றுலா துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள கையேட்டில் தாஜ்மகால் இடம்பெறவில்லை. முஸ்லிம் அரசர் ஒருவரால் கட்டப்பட்டது என்ற காரணத்திற்காகவே தாஜ்மகாலை உத்தரப்பிரதேச அரசு நீக்கியிருப்பதாகத் தெரிகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தாஜ்மகால், ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தாஜ்மகாலை யுனெஸ்கோ  அமைப்பு உலக மரபுச் செல்வங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. ஆண்டொன்றுக்கு சுமார் எண்பது லட்சம் சுற்றுலாப் பயணிகள் தாஜ்மகாலைப் பார்வையிடுகின்றனர். உத்தரப்பிரதேச பாஜக அரசின் இந்த நடவடிக்கை உலக அளவில் இந்தியாவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிவாஜி மணி மண்டபத்தில் கருணாநிதி பெயர் இடம் பெற வேண்டும்

புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்த போது சிவாஜி கணேசனுக்கு சிலை வைக்கப்பட்டது. அந்த சிலையின் பீடத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு புதிதாக திறக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசன் மணி மண்டபத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலையின் பீடத்தில் உள்ள கல்வெட்டில் கருணாநிதியின் பெயர் நீக்கப்பட்டிப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.  உடனடியாக கருணாநிதியின் பெயர் அந்த சிலையின் பீடத்தில் இடம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கருணாநிதி முன்னாள் முதலமைச்சர் மட்டும் அல்ல. அவர் ஒரு திரை உலக கலைஞர். எனவே சிவாஜி மணி மண்டபத்திலும் கலைஞரின் பெயர் இடம் பெற வேண்டும்.  இவ்வாறு கூறினார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url