Type Here to Get Search Results !

ஆரோக்கிய வாழ்வு அரிசி உணவுகள் ஆரோக்கியக் கேடா?






சமீபகாலமாக அரிசி என்ற பெயரைக் கேட்டாலே அலர்ஜியாகிறவர்களை நிறைய பார்க்க முடிகிறது. அரிசி சாப்பிட்டால் நீரிழிவு வரும், அரிசி சாப்பிட்டால் உடல்பருமன் ஏற்படும், அரிசி சாப்பிட்டால் ஃபிட்டாக இருக்க முடியாது போன்ற நம்பிக்கைகள் வேகமாக உருவாகி வருகிறது. உண்மையில் அரிசி உணவுகள் ஆரோக்கியக் கேடான ஓர் உணவா?

‘‘ஆயுர்வேத மருத்துவத்தில் ‘நித்யப்பிரயோகம்’ என்று அரிசியைச் சொல்லி இருக்கிறார்கள். அதாவது தினந்தோறும், வாழ்க்கை முழுவதும் சாப்பிடக்கூடிய ஓர் உணவாகவே அரிசி வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நித்யப்பிரோகம் பட்டியலில் நெய், தேன், நெல்லிக்காய்   போன்றவையும் உண்டு.

மற்ற உணவுகள் உடலின் சில உறுப்புகளுக்கு மட்டுமே நன்மை பயக்கும். ஆனால், அரிசி உடல் உறுப்புகள் அனைத்துக்குமே பயன் தரக்கூடியது. எந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அரிசியால் செய்த உணவை எடுத்துக் கொள்ளலாம். அதனால்தான் காய்ச்சல் நேரத்தில் அரிசிக் கஞ்சியைக் குடிக்கிறோம்.

அரிசி எளிதில் ஜீரணமாகக்கூடியது. சாப்பிட்ட திருப்தியை கொடுக்கக்கூடியது; மூன்று தோஷங்களான வாதம், கபம், பித்தம் மூன்றையுமே சமப்படுத்தக்கூடியது; மனதை ஒருமுகப்படுத்தக்கூடியது என அத்தனை சிறப்புகளையும்கொண்டது அரிசி. இந்தியா, சீனா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாட்டு மக்கள் அதாவது உலக மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் அரிசி உணவைத்தான் எடுத்துக் கொள்கிறார்கள். முக்கியமாக நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற சரியான உணவு அரிசி.




அரிசியின் வரலாற்றைப் பார்க்கும் போது, இதன் தாவரப் பெயரான ‘ஒரைசா’ என்பதே நம் தமிழ் மொழியிலிருந்துதான் தோன்றியிருக்கிறது. 2000 - 3000 முந்தைய அகநானூறு, தொல்காப்பியம் நூல்களில் அரிசியின் வகைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

திருநெல்வேலி பக்கம் ஆதிச்சநல்லூர் மற்றும் பழனி பக்கத்தில் பொருந்தாள் என்ற ஊர்களில் அகழ்வாராய்ச்சியில், 2500 வருடங்களுக்கு முன்பு சேமித்து வைக்கப்பட்ட அரிசி பெட்டகங்களை கண்டெடுத்திருக்கிறார்கள். அந்த அரிசி பூச்சி, வண்டு இல்லாமல், இன்றுவரை கெட்டுப்போகாமல் இருப்பதைப் பார்த்தால் சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விளைவித்து அறுவடை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று ஆச்சரியப்படுகிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள்.

நம் தமிழ் பண்பாட்டில் நெல் பயிரிடுதல், விளைவித்தல், அறுவடை செய்தல் இவற்றைச் சார்ந்தே வாழ்வியல் அமைந்திருப்பது புரியும். இதற்கு சிறந்த உதாரணம் பொங்கல் பண்டிகை. தொன்று தொட்டு பண்டிகை காலங்களில் தயாரிக்கும் முறுக்கு, அதிரசம், சீடை போன்ற தின்பண்டங்கள் கூட அரிசியில் செய்யப்பட்டவைதான்.

என்னவோ தெரியவில்லை. அரிசிக்கு எதிரான ஒரு பிரசாரம் நடந்துகொண்டே இருக்கிறது. அதை நம் மக்கள் நம்பி, அரிசியைப் புறக்கணிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள் என்பது வருத்தத்துக்குரியது’’ என்றவரிடம், எந்த அரிசி சிறந்தது என்று கேட்டோம்...

‘‘அரிசி எவ்வளவு பழையதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நல்லது. குறைந்தபட்சம் 6 மாதமான பழைய அரிசியையே உபயோகப்படுத்த வேண்டும் என்றும், 60 நாட்களில் விளைவிக்கப்பட்ட அரிசி வகையான சிவப்பு நிறத்தில் இருக்கும் அரிசி உத்தமமானது என்றும் நம் ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகளில் கூறப்பட்டிருக்கிறது.

உமி நீக்கப்படாத சிவப்பு, கருப்பு அரிசிவகைகளில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகளும், 18 வகையான அமினோ அமிலங்களும் இருப்பதால் உடலுக்கு தீங்குவிளைவிக்காத உணவாக அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி ஆய்விலும் கண்டுபிடித்திருக்கிறார்கள். சீன நாட்டில் அரச குடும்பத்தினருக்கு மட்டுமே சிவப்பு, கருப்பு அரிசி உணவை சாப்பிடும் உரிமை இருந்து வந்துள்ளது.

இதிலிருந்தே சிவப்பு அரிசியின் பெருமையை அறியலாம். அரிசி உணவுகளில் கலோரி அதிகம், கிளைசமிக் இன்டெக்ஸ் அதிகம் என்பதுதான் மக்களிடம் இருக்கும் பயத்துக்குக் காரணம். ஆனால், தமிழ் பாரம்பரிய அரிசி வகைகளான சீரகச்சம்பா, குதிரைவாலி, மரநெல், கருப்பு கௌலி, தங்கச்சம்பா, வாடான்சம்பா, கலியன் சம்பா, புலிவெடிச்சான், வெள்ளைக்குருவை, கார், கல்லுருண்டை போன்றவற்றில் அறிவுறுத்தப்பட்ட அளவான 55-க்கும் குறைவான கிளைசமிக் இன்டெக்ஸ்தான் இருக்கிறது. கலோரி அளவும்குறைவாகவே இருக்கிறது.

இவற்றை சமைத்து சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவோ, கொழுப்பு அளவோ ஏறாது. இப்போதுள்ள குறுகிய காலத்தில் விளைவிக்கப்படும் நெல் வகைகளான ஐ.ஆர் 8 போன்றவற்றில் உமி நீக்கப்படுவதால் கிளைசமிக் இன்டெக்ஸின் அளவு 59-க்கும் அதிகமாகவும், தீமை செய்யும் கொழுப்புச்சத்து மிகுந்து இருப்பதால் மருத்துவர்கள் அரிசியை தவிர்க்கச் சொல்கிறார்கள்.

உமி நீக்கப்படாத பாரம்பரிய அரிசி வகைகளில் நார்ச்சத்தும், நல்ல கொழுப்பும்கூட சிறிதளவுதான் கிடைக்கிறது. பயிரிடப்படாத நெல் வகையல்லாத மரவகை மூங்கிலரிசிதான் இருப்பதிலேயே சிறந்த அரிசி. எல்லா மூங்கில்களிலும் அரிசி கிடைக்காது, குறிப்பிட்ட சில மூங்கில் வகைகளில் மட்டுமே இருக்கிறது.

மற்ற எல்லா அரிசி வகைகளைக் காட்டிலும் புரோட்டீன் மற்றும் வைட்டமின் ‘D’ சத்தும் மிகுந்துள்ளது. சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில், மூங்கிலரிசியை நீரிழிவிற்கு எதிரான உணவாக சொல்கிறோம். நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய அரிசியாகவும் சொல்கிறோம்’’ என்கிறார்.

அரிசி உணவுகள் ஆரோக்கியமாக இருக்க...

தவிடு நீக்காத பாரம்பரியமானதாக அரிசி இருக்க வேண்டும். சாதத்தை அலுமினிய பிரஷர் குக்கரில் சமைக்காமல் செம்பு, பித்தளை, எவர்சில்வர் பாத்திரங்களில் குறைந்த வெப்பத்தில் நீண்ட நேரம் சமைப்பது நல்லது. கஞ்சியை வடிகட்டுவது அவசியம். எந்த உணவையும் காற்றும், சூரிய ஒளியும் படும்படியே சமைக்க வேண்டும். இந்த நான்கு கட்டளைகளைப் பின்பற்றி சமைத்த அரிசி உணவு யாருக்கும் எந்த தீங்கும் செய்யாது என்பது உறுதி.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad