Type Here to Get Search Results !

அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பயங்கரம் துப்பாக்கிச்சூட்டில் 58 பேர் பலி





லாஸ் வேகாஸ்: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 58 பேர் பலியாயினர். 400 பேர் படுகாயமடைந்தனர். ஓட்டலின் 32வது மாடியில் இருந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட முதியவர், பின்னர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் சூதாட்டம், கேளிக்கைக்கு பேர்போன நகரம் லாஸ் வேகாஸ். இங்குள்ள லாஸ் வேகாஸ் ஸ்டிரிப் சாலையில் உள்ள ரூட் 91 ஹர்வெஸ்ட் என்ற திறந்தவெளி கூடத்தில் 3 நாள் நாட்டுப்புற இசை திருவிழா நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக தொடங்கியது. உள்நாட்டு நேரப்படி இரவு 10 மணி அளவில் ஜேசன் அல்டீனின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. 22,000 பேர் ஆட்டம், பாட்டத்துடன் இசை நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டது.

உடனடியாக இசை நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. மக்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கி குண்டுகள் சரமாரியாக பாய்ந்தன. சுதாரித்து ஓடுவதற்குள் பலர் குண்டடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாயினர். பலரும் உயிர் பிழைக்க நாலாபுறமும் அலறி அடித்து ஓடினர். மகிழ்ச்சிக் கூச்சலுடன் இருந்த அப்பகுதி மரண ஓலமாக மாறியது. தகவலறிந்த அதிரடிப்படையினரும், போலீசாரும் விரைந்து வந்து மக்களை பத்திரமாக வெளியேற்றினர். லாஸ் வேகாஸ் ஸ்டிரிப் சாலை மூடப்பட்டது. இசை நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு எதிரே இருந்த மாண்டலே பே என்ற ஓட்டலிலிருந்து மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடுவதை கண்டுபிடித்த போலீசார் அங்கு அதிரடியாக புகுந்தனர். அந்த ஓட்டலின் 32வது மாடியில் உள்ள ஒரு அறையில் பதுங்கியிருந்தபடி மர்ம நபர், ரசிகர்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தார். அதிரடிப்படையினர் அந்த அறைக்கு சென்றபோது, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார்.



 அந்த அறையில் 10 நவீன ரக இயந்திர துப்பாக்கிகள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 58 பேர் பலியாகினர். 400 பேர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் 2 பேர் போலீசார் என கூறப்படுகிறது. இவர்கள் விடுமுறையில் இசை நிகழ்ச்சியை ரசிக்க சென்றுள்ளனர். பயங்கர தாக்குதல் நடத்தியவர் 64 வயதான ஸ்டீபன் பேட்காக் என போலீசார் உறுதி செய்துள்ளனர். இவரைத் தவிர வேறு யாரும் இந்த நாச வேலையில் ஈடுபடவில்லை எனவும் போலீசார் உறுதி செய்துள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் சிறிது நேரத்திற்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இந்த சம்பவம் அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக அந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவத்திற்கு கடும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘லாஸ் வேகாஸில் தாக்குதல் நடத்தியவர் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் மதம் மாறினார்’’ என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமாக தாக்குதல் நடத்தும் ஐஎஸ் தீவிரவாதிகள், சரணடையவோ, தற்கொலை செய்து கொள்வதோ இல்லை. ஆனால், பேட்ரிக் தற்கொலை செய்து கொண்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.




எதற்காக துப்பாக்கிச்சூடு?

தற்கொலை செய்து கொண்ட முதியவர் ஸ்டீபன் பேட்காக், லாஸ் வேகாஸ் அருகில் உள்ள நவேடா மாநிலத்தை சேர்ந்த மெஸ்குயிட் நகரை சேர்ந்தவர். ஆடிட்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், தனது தோழி மரினோ டேன்லேவுடன் வசித்து வந்தார். இருவரும் சேர்ந்து 2.5 கோடி மதிப்பிலான வீட்டை வாங்கி சேர்ந்து வாழ்ந்துள்ளனர். வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டவரான பேட்காக் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை. சூதாட்டம் ஆடுவதற்காக பேட்காக் லாஸ்வேகாஸ் வந்ததாக அவர் சகோதரர் கூறி உள்ளார். ஆனால் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினார், தற்கொலை செய்து கொண்டார் என்பது மர்மமாகவே உள்ளது. அவரது தோழி மரினோவிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

பயங்கரத்தை விட கொடியது

துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பாடகர் ஜேசன் அல்டீன் கூறுகையில், ‘‘துப்பாக்கிச்சூட்டை முதலில் பட்டாசுகள்தான் வெடிக்கின்றன என்று நினைத்தோம். ஆனால், பின்னர்தான் பலர் இறந்து விழுவதை பார்த்து துப்பாக்கிச்சூடு என்று தெரிந்து கொண்டோம். எங்கள் கண் எதிரே பலர் இறந்து விழுந்தனர். இது பயங்கரத்தை காட்டிலும் மிக கொடிய சம்பவம்’’ என்றார்.

அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்

கடந்த 2015ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 2015ல் மட்டும் அங்கு பொது இடத்தில் மக்களை குறிவைத்து 375 துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 475 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பு தனிநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவங்களை மட்டும் அடிப்படையாக கொண்டவை. இதுதவிர, ஒட்டுமொத்தமாக அந்த ஆண்டில் மட்டும் 13,286 பேர் துப்பாக்கிக்கு பலியாகி உள்ளனர். இதனால் துப்பாக்கி விற்பனை விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. இருந்தபோதிலும், துப்பாக்கி சூடு சம்பவங்கள் குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வரலாற்றில் கொடூரமான சம்பவம்

லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு அமெரிக்க வரலாற்றில் நிகழ்ந்த மிகக் கொடூரமான சம்பவமாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் புளோரிடா மாகாணத்தின் ஆர்லாண்டோவில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்கள் இரவு விடுதியில் உமர் மதீன் என்ற ஐஎஸ் தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர். 58 பேர் காயமடைந்தனர். இதுவே அமெரிக்க வரலாற்றில் தனிநபர் நடத்திய ெகாடூர தாக்குதலாக இருந்தது. இதனை லாஸ் வேகாஸ் சம்பவம் மிஞ்சியிருக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad