ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்த்து வழக்கு : ஐகோர்ட்டில் நாளை விசாரிக்க வாய்ப்பு




சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 17ம் தேதி அறிவித்தார். இதற்கு ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  முசிறியை சேர்ந்த தங்கவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவரின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற கூடாது.

சொத்து வழக்கில் அனைத்து சட்ட விரோத பரிவர்த்தனைகளும் வேதா நிலையத்தில் நடந்துள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனால் அதை நினைவு இல்லமாக மாற்றுவது தவறான முன்னுதாரணமாகி விடும். முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து நிதித்துறை செயலாளரும், சட்டத்துறை செயலாளரும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். முதல்வரின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url