Type Here to Get Search Results !

நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த கவர்னருக்கு உத்தரவிட கோரி ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு : திமுக, காங், கம்யூ எம்பிக்கள் சந்தித்து வலியுறுத்தல்
சென்னை: அதிமுக அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த கவர்னருக்கு உத்தரவிடக்கோரி ஜனாதிபதியை சந்தித்து நேற்று திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எம்பிக்கள் சந்தித்து வலியுறுத்தினர். அப்போது அவர்கள் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அளித்தனர். ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக எடப்பாடி தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் இரண்டு அணிகளும் ஒன்றாக இணைந்தன. அப்போது சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். இதற்காக பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  இதனால் கொதித்துப்போன தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் எடப்பாடிக்கு தங்கள் ஆதரவு இல்லை என்று தெரிவித்தனர். இதனால் தமிழகத்தில் உள்ள திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எடப்பாடி அரசு மெஜாரிட்டி இழந்ததாக குற்றம்சாட்டியதுடன், பேரவையில் மெஜாரிட்டி நிரூபிக்க எடப்பாடி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது தன்னை சந்தித்த அரசியல் கட்சி தலைவர்களிடம், அது அதிமுக உள்கட்சி பிரச்னை என்று கவர்னர் தெரிவித்ததாக கூறினர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எழுதிய கடிதத்தை நேற்று திமுகவின் சார்பில் திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் கனிமொழி எம்.பி., எம்பிக்கள் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, செய்தி தொடர்பு செயலாளர்  டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டி.ராஜா ஆகியோர் இந்திய குடியரசு தலைவரை நேற்று காலை 11 மணியளவில் நேரில் சந்தித்து வழங்கினர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை 19 எம்எல்ஏக்கள் திரும்ப பெற்றுள்ளளனர். இதனால் தமிழகத்தில் நிலவி வரும் அரசியலமைப்புச் சட்டக் குழப்பம் குறித்து குடியரசுத் தலைவர் அவர்களின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். ஆளும் அதிமுகவின் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டதும், முன்னதாக ஆதரவளித்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் மாறுபட்ட மற்றும் வேறுபட்ட கருத்துகளை கூறி வருவதையும் பார்க்கும் போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் குழு 234 சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழந்திருப்பது தெளிவாக தெரிகிறது.

234 சட்டமன்ற உறுப்பினர்களில் பேரவைத் தலைவர் உள்ளிட்ட 113 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே தற்போதைய அதிமுக அரசு பெற்றிருக்கிறது.  அதேசமயம், இந்த அரசுக்கு எதிரான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 120 ஆக இருப்பதோடு, ஒரு உறுப்பினருக்கான இடம் காலியாக உள்ளது. (திமுக 89, காங்கிரஸ் 8, ஐயூஎம்எல் 1 மற்றும் அதிருப்தி தெரிவித்துள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 22) ஆனால், கடந்த 21ம் தேதி துணை முதல்வரை நியமித்த கவர்னர் இந்த உண்மைகளை கவனத்தில் கொள்ளாமல் பெரும்பான்மையை இழந்த அரசின் முதலமைச்சரின் ஆலோசனையின்படி செயல்பட்டுள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், கடந்த 22ம் தேதி “முதல்வரை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்திரவிட வேண்டும்” என்று ஆளுநருக்கு உடனடியாக கடிதம் ஒன்றை எழுதினேன். ஆனால், ஆளுநர் இன்னும் என் கோரிக்கை மனுவின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

திமுக மட்டுமல்லாமல், தமிழக சட்டசபையில் இடம்பெற்றுள்ள எதிர்க் கட்சிகளான காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவற்றின் சார்பிலும், தமிழக முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளன. ஆனால், பதவியேற்பு விழாவிற்கு வந்த  ஆளுநர், மாநிலத்தில் உள்ள கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலையில் மறந்து விட்டு, மகாராஷ்டிர மாநிலத்துக்கு உடனே புறப்பட்டுச் சென்று விட்டார். மேலும், தமிழக அமைச்சரவை பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில், அரசின் பெரும்பான்மையை சட்டப்பேரைவையில் நிரூபிக்க வேண்டுமே தவிர “ராஜ்பவனில் அல்ல”  என்பதை மறந்து அரசியலமைப்புச் சட்டம் அவருக்கு வழங்கியுள்ள கடமையை மேற்கொள்ள தவறியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் வழங்கியுள்ள தீர்ப்புகள் அனைத்தும் ஆளுநரால் மீறப்பட்டு உள்ளன. அமைச்சரவைக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதில் சந்தேகம் எழும்போது, சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு தீர்ப்புகளில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்து இருந்தபோதிலும், ஜனநாயகரீதியிலான மரபுகளை ஆளுநர் உதாசீனப்படுத்தி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, பெரும்பான்மை இல்லாத அரசு தொடர்ந்து நடைபெறவும், ஆட்சி அதிகாரங்களைப் பயன்படுத்தவும் ஆளுநர் அனுமதித்து இருப்பது, அரசியல் சட்டத்திற்கும், இந்திய அரசியலமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள 164வது சட்டப்பிரிவின்படியான பாராளுமன்ற அமைப்புக்கும் முற்றிலும் எதிரானதாக அமைந்திருக்கிறது.

பெரும்பான்மையை இழந்த அரசின் ஆலோசனையின்படி ஆளுநர் செயல்பட்டு, அமைச்சர்களுக்கான துறைகளை மாற்றியிருப்பது, புதிய அமைச்சர்களை நியமித்திருப்பது அதிமுக அரசு தமிழ்நாடு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுள்ளது என்ற தவறான செய்தியை வாக்காளர்களுக்கு தெரிவிக்கும் விதத்தில் அமைந்து விட்டது. ஆளுநரின் செயல்பாடு, மாநிலத்தில் பாராளுமன்ற அமைப்பை ஊக்குவிப்பதற்கு பதில் அதை அர்த்தமற்றதாக ஆக்கியிருக்கிறது. ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடாமல் அமைதி காப்பது, பாராளுமன்ற அமைப்பை குலைப்பதாகவும், அரசியல் குதிரை பேரம் மற்றும் மாநிலத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமான அரசியல் நடவடிக்கைகளை நேரடியாக ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது.
 தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், பேரவையில் பெரும்பான்மையை இழந்துவிட்ட ஒரு அமைச்சரவை, சட்டமன்றப் பேரவைக்கு கூட்டுப் பொறுப்புள்ள அமைச்சரவையாக இருக்காது என்று உறுதியாக நம்புகிறேன். எனவே, மாநிலத்தில் தற்போது நிலவிவரும் அரசியலமைப்புச் சட்ட செயலற்ற நிலையில், குடியரசுத் தலைவர் உடனடியாக தலையிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநருக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பாராளுமன்ற அமைப்பின் சட்டமன்றத்திற்கு அமைச்சரவை கூட்டுப் பொறுப்பாகிறது என்ற தத்துவத்தை  மாநிலத்தில் மீண்டும் நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

எம்பிக்களிடம் ஜனாதிபதி உறுதி

காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா: தமிழக முதல்வர் பெரும்பான்மையை இழந்து விட்டார். விரைவில் சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும். 21 எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிராக இருக்கும்போது எப்படி ஆட்சி பெரும்பான்மையுடன் இருக்கும். இதனை அவர் உடனடியாக நிரூபிக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி: ஆளும் கட்சி மெஜாரிட்டியுடன் இருப்பது உண்மை என்றால், சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். டி.ராஜா எம்பி: தமிழக அரசியலை பொறுத்தவரை ஆளும் கட்சியானது அதிகப்படியான நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இதனால் அவர்களின் ஆட்சி நடைமுறை என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. முதல்வருக்கு பெரும்பான்மை இல்லை என தெரிந்தும் ஆளுநர் அவருக்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இந்த நடவடிக்கை மிகவும் ஐயப்பாடாக உள்ளது. அரசியல் சட்டத்தின் தலைவர் என்ற முறையில் குடியரசு தலைவரை சந்தித்து முறையிட்டுள்ளோம். இதைகேட்ட குடியரசு தலைவர், மாநிலத்தில் இப்படி ஒரு ஸ்திரத்தன்மை இல்லாத தன்மை ஏற்பட்டால், மக்களின் நன்மைக்கு சரியானது அல்ல என்றார். மனு குறித்து பரிசீலனை செய்ய கால அவகாசம் கேட்டுள்ளார்.

கனிமொழி எம்பி: சட்டமன்றத்தை கூட்டி உடனடியாக முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இப்போது மட்டும் அதிமுகவில் நடப்பது உள்கட்சி விவகாரம்; அதில் தலையிடுவதற்கு ஒன்றும் இல்லை என கூறும் ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஓபிஎஸ் கூறும்போது நடவடிக்கை மேற்கொள்ளதாது ஏன்? இந்த நிலைப்பாடானது முதல்வர் மீதும், அவரது ஆட்சி மீதும் நம்பிக்கை இல்லை என தெரிகிறது. முதல்வர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என குடியரசு தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார். ஒருவேளை இதில் காலதாமதம் ஆகும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று கூடி சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள தயங்கமாட்டோம். முதல்வர் பெரும்பான்மையை நிரூபிப்பதால் மட்டுமே தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெறும். இதற்கு ஆளுநர் உத்தரவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad