தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கனமழை பெய்தது. இந்தநிலையில், நேற்று காலை வெயிலின் தாக்கம் சராசரியைவிட அதிகமாக இருந்தது. வெப்பத்தின் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மாலை 4.30 மணியளவில் வடபழனி, கோடம்பாக்கம், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உட்பட சென்னையின் பல பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது. அரை மணி நேரம் நல்ல மழை பெய்தது. இதனால், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியது. திடீர் மழையால் நேற்று மாலை அண்ணாசாலை, ஆற்காடு சாலை உட்பட நகரின் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இது குறித்து, வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நிருபர்களை சந்தித்து கூறியதாவது: மேற்கு திசைக் காற்று வேக மாறுபாடு மற்றும் வெப்பசலனம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், கனமழையும் பெய்துள்ளது. கிழக்கு திசை காற்று வளிமண்டலத்தின் மேலடுக்கில் வீச வாய்ப்புள்ளதால், அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். வட தமிழகம் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை தென்மேற்கு பருவமழை 25 செமீ பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 23% அதிகம் ஆகும். சென்னையில் மாலை, இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.