புனேயில் இருந்து வந்து காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி: கோவையில் இன்று பரபரப்பு
கோவை: கோவை போத்தனூர் அருகே உள்ள கோணவாய்க்கால்பாளையத்தை சேர்ந்தவர் விஜயராஜ். இவரது மகன் சிரஞ்சீவி(எ) சந்தோஷ்(23). இவர் ஐடிஐ படித்து முடித்து விட்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிஎன்சி மெஷின் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். அவர் பணிபுரியும் இடத்தில் ஓட்டல் நடத்தி வந்த சங்கர் என்பவரது ஓட்டலுக்கு அடிக்கடி சாப்பிட செல்வார். அப்போது சங்கர் மகள் ஜான்வி(19) என்பவர் மீது காதல் ஏற்பட்டது. அவரை திருமணம் செய்து கொள்வதாக சந்தோஷ் கூறியதை அடுத்து இருவரும் 3 வருடமாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சந்தோஷ் அரசூரில் உள்ள அவர் பணியாற்றும் சார்பு நிறுவனத்துக்கு மாறுதல் செய்யப்பட்டார். இங்கு வந்த பின்பு அவர் காதலியிடம் செல்போனில் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.கோணவாய்க்கால் பாளையத்தில் அபிநயா என்பவர் வீட்டுக்கு பக்கத்தில் சந்தோஷ் வீடும் இருந்தது. அபிநயா எம்.எஸ்சி படித்து முடித்து விட்டு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவருக்கும், சந்தோசுக்கும் இன்று காலை, ஈச்சனாரி கோயிலில் திருமணம் நடைபெறுவதாகவும், மாலையில் போத்தனூர் ரயில்வே திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெறுவதாகவும் இருந்தது.
இதற்கிடையே இன்று காலை ரயில் மூலம் கோவை வந்த ஜான்வி கோணவாய்க்கால்பாளையத்திலுள்ள சந்தோஷ் வீட்டுக்கு சென்றார். அங்கு வீடு பூட்டி கிடந்தது. பின்னர் ரயில்வே திருமண மண்டபம் சென்றார். அங்கு யாரும் இல்லை. இதை தொடர்ந்து போத்தனூர் காவல் நிலையம் சென்ற அவர் காதலன் சந்தோஷ் தன்னை ஏமாற்றி வேறு ஒரு பெண்ணை இன்று திருமணம் செய்து கொள்வதாக புகார் கூறினார். இதை அடுத்து போத்தனூர் போலீசார் ஜான்வியுடன் ஈச்சனாரி கோயிலுக்கு சென்றனர். சந்தோசும், அபிநயாவும் மணக்கோலத்தில் மாலையும் கழுத்துமாக கோயிலுக்குள் தாலி கட்ட சென்றனர். அங்கு வந்த போலீசார் திருமணத்தை தடுத்து நிறுத்தி நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். இதனால் இருவீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். மணமகள் அபிநயா கதறி அழுதார். தடபுடலாய் நடந்த விருந்தும் நிறுத்தப்பட்டது. பின்னர் சந்தோசை போலீசார் போத்தனூர் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அவரை புனே அழைத்து செல்ல போலீசார் முடிவு செய்துள்ளனர்.