100வது ஸ்டம்பிங்: டோனி உலக சாதனை
ஒருநாள் போட்டிகளில் 100 ஸ்டம்பிங் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமை இந்தியாவின் எம்.எஸ்.டோனிக்கு கிடைத்துள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் இலங்கை அணியுடன் நேற்று நடந்த 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், சாஹல் பந்துவீச்சில் அகிலா தனஞ்ஜெயாவை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றியதன் மூலமாக டோனி இந்த சாதனையை நிகழ்த்தினார். அவர் தனது 301வது போட்டியில் இந்த சாதனை மைல் கல்லை எட்டியுள்ளார்.
இதில் இந்திய அணிக்காக 97 ஸ்டம்பிங்கும், ஆசிய லெவன் அணிக்காக 3ம் அடங்கும் (2007). இலங்கை விக்கெட் கீப்பர் குமார் சங்கக்கராவின் சாதனையை (99 ஸ்டம்பிங்) அவர் முறியடித்துள்ளார். இலங்கையின் ருமேஷ் கலுவிதரணா 3வது இடத்திலும் (75), பாகிஸ்தானின் மொயின் கான் (73) 4வது மற்றும் ஆஸி. விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் (55) 5வது இடத்தில் உள்ளனர். டோனி அதிகபட்சமாக ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் 19 ஸ்டம்பிங் செய்துள்ளார். ஜடேஜா (15), அஷ்வின் (14) அடுத்த இடத்தில் பங்களித்துள்ளனர்.