"கழுத்தை அறுத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்" : தமிழக விவசாயிகள் எச்சரிக்கை
டெல்லியில் 58-ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் குழுவினர், தங்களை பிரதமர் நரேந்திர மோதி தொடர்ந்து சந்திக்காமல் அலைகழித்தால் அடுத்தகட்டமாக கழுத்தை அறுத்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.
நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் குழுவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 23-ஆம் தேதிவரை என 41 நாட்களாக இந்த விவசாயிகள் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் (தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சர்) உள்ளிட்டோரும் தமிழக முதல்வரும் விவசாயிகளை சந்தித்து போராட்டத்தை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை விவசாயிகள் திரும்பப் பெற்றனர்.
ஆனால், கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த உறுதிமொழியை பின்னர் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்று விவசாயிகள் முறையிட்டனர்.
இந்நிலையில் டெல்லியில் கடந்த ஜூலை 16-ஆம் தேதி முதல் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலையில் படுத்து உருளுவது, மண் சோறு சாப்பிடுவது, இலை தழைகளை கட்டிக் கொள்வது, செருப்பால் அடித்துக் கொள்வது என விவசாயிகள் நூதன முறையில் போராடி வருகின்றனர். ஆனால், அவர்களின் போராட்டத்திற்கு மத்திய அரசு தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் யாரும் செவி சாய்க்கவில்லை.
இதைத்தொடர்ந்து டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மனித மலம் சாப்பிடுவதாகக் கூறி சில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் துயரைத் துடைக்கவும் அவர்களின் குறைகளைக் கேட்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும் என்பதற்காக அதன் கவனத்தை ஈர்ப்பதற்காக இவ்வாறு போராடுவதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
இந்நிலையில் போராட்டத்தின் 58-ஆவது நாளான திங்கட்கிழமை, சுமார் 30 விவசாயிகள் மேல் சட்டை அணியாமல் முன்பக்கம் மட்டும் கீழாடையை தொங்க விட்டபடியும்,பின்புறம் நிர்வாணமுமாக காட்சியளித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி ஜந்தர் மந்தர் சாலையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்து சில மீட்டர் தூரம் விவசாயிகள் பின் பக்கம் அரை நிர்வாணமாக இருந்தபடி ஊர்வலமாகச் சென்று விட்டு மீண்டும் தங்கள் பகுதிக்கு வந்தனர்.
அப்போது அவர்களை டெல்லி காவல்துறையினர் போலீஸ் வாகனத்தில் ஏற்றி அருகே உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இரவு 7.30 மணிவரை வைத்திருந்த பிறகு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், பொது இடத்தில் அநாகரிகமாகவும் ஈடுபட்டதால் அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முன்னதாக காவல் நிலையத்தில் இருந்தபோது, அய்யாக்கண்ணு கூறுகையில், "கடன் தள்ளுபடி கோரிக்கையை வலியுறுத்தியும் நதிகளை இணைக்க வலியுறுத்தியும் டெல்லியில் போராட்டம் நடத்த வந்தோம்.ஆனால், விவசாயிகளின் குறைகளைக் கேட்க மறுக்கும் பிரதமர் தொடர்ந்து எங்களை அலைகழித்து வருகிறார்" என்றார்.
"தலைநகரில் விவசாயிகள் ஆதரவின்றி உள்ள நிலையில் அவர்களை சந்திக்க மறுக்கும் பிரதமர் நரேந்திர மோதியின் கவனத்தை ஈர்ப்பதற்காக தற்போது பின்பக்கம் தெரியும்படி அரைநிர்வாணமாக போராடினோம்" என்று அவர் குறிப்பிட்டார்.
"இதையடுத்து நாளை செவ்வாய்க்கிழமை முழு நிர்வாண போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். அதற்கும் பிரதமர் மோதி செவி சாய்க்காமல் அலட்சியமாக இருந்தால் அடுத்த கட்டமாக கழுத்தை அறுத்துக் கொண்டு உயிரைத் துறக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார் அய்யாக்கண்ணு.
டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர கொண்டாட்டத்தின்போது தமிழக விவசாயிகள் ஏதாவது பிரச்னை செய்வார்கள் எனக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை முதல் நாள் இரவு முதல் சுதந்திர தின மாலைவரை டெல்லி காவல்துறையினர் தடுப்புக் காவலில் வைத்திருந்தனர்.
அதன் பிறகு இரண்டாவது முறையாக விவசாயிகள் இன்று தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.