நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் காலக் கெடு









மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கிழ் செயல்படும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக முடிவை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நிதிமன்ற மதுரை கிளை 8 வார கால அவகாசம் அளித்துள்ளது.

எனினும் தமிழகம் போன்ற அதிகமான பள்ளிகளை கொண்டுள்ள ஒரு மாநிலத்தில் புதிய பள்ளிக்கூடங்கள் தொடங்க தேவையில்லை என தமிழக உயரதிகரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நீதிபதிகள் சசிதரன் மற்றும் சுவாமிநாதன் அமர்வு முன்பாக இன்று திங்கள்கிழமை  நடைபெற்ற இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது இப்பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கவும் நிலம் ஒதுக்கவும் தமிழக அரசு உதவ வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நவோதயா பள்ளிகளைப் பொறுத்தவரை, மாநில அரசு 30 ஏக்கர் நிலத்தை  இலவசமாகவோ, நீண்ட காலக் குத்தகைக்கோ அளிக்க வேண்டும்.



இத்தகைய சூழலில் இப்பள்ளிகளுக்கு வேண்டிய நிலத்தை தமிழக அரசு உடனடியாக  ஒதுக்கினாலும் கூட கட்டிடம் கட்ட கால அவகாசம் தேவைப்படும் என்பதால் வரும் ஜனவரி மாதம் முதலே அப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நடைமுறைபடுத்த  முடியாது என்கிற வாதமும் இன்றைய விசாரணையின் போது முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனால் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் வரை தற்காலிகமாக ஏற்பாடுகளை  செய்துக்கொள்ளவும் இன்று நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது என்கிற ஒரே காரணத்திற்காக ஜவஹர்  நவோதயா வித்யாலயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க ஒத்துழைப்பு  கொடுக்காமல்இருப்பது தவறு என கூறி, குமரி மகா சபா என்கிற அமைப்பின்  செயலாளரான ஜெயக்குமார் தாமஸ் என்பவர் தொடுத்திருந்த வழக்கு மீதான விசாரணையில் தான் இன்றைய  உத்தரவு வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

மேலும்  கடந்த வருடம் புதிதாக 62 நவோதயா பள்ளிகள் துவங்க மத்திய அரசு  ஒப்புதல் அளித்தது. அப்போதிலிருந்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா,  ஓ. பன்னீர்செல்வம், தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  ஆகியோரை சந்தித்து தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவங்க அனுமதி வழங்க கேட்டதாகவும்ஆனால் இன்றுவரை தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக  தெரியவில்லை என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் அதில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழகம் போன்ற அதிகமான பள்ளிகளை கொண்டுள்ள ஒரு மாநிலத்தில், புதிய பள்ளிக்கூடங்கள் தொடங்க தேவையில்லை என்றும், இருக்கும் ஏராளமான பள்ளிக்கூடங்களின் தரத்தை உயர்த்த மத்திய அரசு நிதி ஒதுக்கினாலே போதுமானது என்றும் தமிழக அரசின் உயரதிகாரிகள் கருத்து வெளியிடுகின்றனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url