கதிராமங்கலத்தில் 116 நாளாக போராட்டம்: கண்டுக்கொள்ளாத அரசுகள்: மக்கள் வேதனை
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டம் 116வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரைக் கைது செய்து போலீசார் சிறையிலடைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையிலிருக்கும் 10 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கதிராமங்கலம் அய்யனார் கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். கதிராமங்கலம் பொதுமக்கள் அறவழியில் போராடி வருகிறார்கள். 116 நாட்கள் முடிந்து விட்ட நிலையில் இது வரை மத்திய, மாநில அரசுகள் கண்டுக்கொள்வில்லை.
கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதியன்று, கதிராமங்கலம் வனத்துர்கை அம்மன் கோவில் அருகே ஓஎன்ஜிசி எரிபொருள் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அதிலிருந்து எரிபொருள் வெளியேறியது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள்,பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள என பல்வேறு அமைப்பினர் சாலை மறியலில் போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து போராட்டம் நடத்திய பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
இன்று தஞ்சை ஆட்சியர், கதிராமங்கலம் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் போராட்டக்காரர்கள் யாரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.