வடகொரியா பிரச்னையை பேசி தீர்க்காமல் வேறு நடவடிக்கை எடுத்தால் உலக பேரழிவு ஏற்படும்
ஜியாமென்: வடகொரியா அணு ஆயுத சோதனை விவகாரத்தை பேசி தீர்க்காமல் வேறு நடவடிக்கை எடுத்தால், உலக பேரழிவு ஏற்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். வடகொரியா மீது மேலும் பல நடவடிக்கைகள் மற்றும் போர் தொடுப்பது பற்றி அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தநிலையில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீனா வந்திருந்த ரஷ்ய அதிபர் புதின் இந்த பிரச்னை குறித்து பேசினார். அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு: வடகொரியாவின் ஆத்திரமூட்டும் செயல்கள் கண்டிக்கத்தக்கவைதான். அதை பேசித்தான் தீர்க்க வேண்டும். இந்த சமயத்தில் பொருளாதாரத்தடை உள்ளிட்ட எந்த நடவடிக்கை மேற்கொண்டாலும் அது பயன் அற்றதும், திறமையற்ற நடவடிக்கையை குறிப்பதும் ஆகும். மற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது பிரச்னை பெரிதாகி சக்திவாய்ந்த நாடுகளிடையே பிளவு ஏற்பட்டு உலக பேரழிவுதான் ஏற்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உலக பேரழிவுக்கும், ஒரு மிகப்பெரிய எண்ணிக்கை பலியாவதற்கும் காரணமாகும். இவ்வாறு அவர் கூறினார். இதனால் பிரச்னை அதிகரித்துள்ளது.
போர் வேண்டும் என்கிறது வடகொரியா
வடகொரியா விவகாரம் குறித்து ஐநாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியதாவது: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் நடவடிக்கையை தற்காப்பு என்று பார்க்க முடியாது. அமொிக்கா எப்போதும் போரை விரும்பியது இல்லை. இப்போதும் போர் நடைபெற நாங்கள் விரும்பவில்லை. ஆனால் போர் வேண்டும் என்கிறது வடகொரியா.
எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. எங்கள் பகுதிகளையும், எங்களது கூட்டணி நாடுகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம். பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிறார்கள். அது ஏற்கனவே முடிந்து போய்விட்டது. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்றால் வடகொரியாவில் இருந்து அதற்கான சமிக்ஜைகள் வரவேண்டும். இல்லாவிட்டால் எங்கள் அதிரடி தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.