பெங்களூரில் மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை
பெங்களூர்: பெங்களூரில் மூத்த பெண் பத்திரிகையாளர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சுட்டுக் கொன்றனர். மறைந்த கன்னட எழுத்தாளர் லங்கேஷின் மகளான கவுரி லங்கேஷ் என்பவர், லங்கேஷ் பத்ரிகே என்ற வாரப் பத்திரிகையை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்றிரவு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள வீட்டிற்கு காரில் வந்த அவரை, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 3 பேர், வீட்டுக்குள் நுழைந்ததும் துப்பாக்கியால் திடீரென சுட்டனர்.
அடுத்தடுத்து 3 குண்டுகள் உடலில் பாய்ந்ததில், கவுரி லங்கேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் மர்ம நபர்கள் தப்பிஓடிவிட்டனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கவுரி லங்கேஷின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாக பெங்களூர் காவல்துறை ஆணையர் தெரிவித்தார். கவுரி லங்கேஷின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
தீவிர ஹிந்துத்வா விமர்சகராக அறியப்பட்ட கௌரி லங்கேஷ், பெங்களூரு ராஜேஸ்வரி நகர் பகுதியில் வசித்து வந்தார். சமூக ஆர்வலரான கௌரி லங்கேஷ், தீவிர வலதுசாரி எதிர்ப்பாளராக அடையாளம் காணப்பட்டவர். லங்கேஷ் பத்திரிகே என்ற கன்னட பத்திரிகையை நடத்தி வரும் கௌரி லங்கேஷ், ஆங்கிலம் மற்றும் கன்னடப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வந்தவர். மதவாதத்துக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துவந்த கௌரி லங்கேஷுக்கு பல்வேறு சமயங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு கோழைத்தனமான செயல் ஆகும், கவுரி லங்கேஷ் ஒரு சிறந்த பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவர், தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவரோ அல்லது நக்சலைட்டோ இல்லை என்று அவரது நண்பர் தெரிவித்துள்ளார். மேலும் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்து அவரது இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடைபெற்றது மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்றனர்.