சட்ட விரோதமான கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை : சட்டத்தை மீறி செயல்படும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும், விதிகளை மீறும் அரசியல் கட்சியோ கட்சியின் பிரதிநிதியோ தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தங்களுக்கு அதிகாரம் இல்லை என கூறியிருந்தது.
இதையடுத்து ஜோசப் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் அரசியல் கட்சிகளின் பதிவை அங்கீகரிக்கும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் இருக்கிறதா, இல்லையா? என்பது குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அரசியல் சட்டத்துக்கு எதிராக செயல்படும் கட்சி அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் சட்ட விரோதமான கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.