எல்லையில் பதற்றம் தணிந்த நிலையில் சீனா அதிபரை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி
ஜியாமென் : ஐந்து நாள் பயணமாக சீனா, மியான்மர் நாடுகளுக்கு சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி, சீனாவின் ஜியாமென் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேசவுள்ளதாக இந்தியா வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. டோக்லாம் எல்லைப் பகுதியில், சீனாவும், இந்தியாவும் படைகளை திரும்ப பெற்று விட்டதால், மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனா மட்டுமன்றி, ரஷ்ய அதிபர், விளாடிமிர் புடின் உள்ளிட்ட மற்ற உறுப்பு நாடுகளின் தலைவர்கள், தொழில் அதிபர்களையும் மோடி சந்திக்க திட்டமிட்டுள்ளதாக வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டை தொடர்ந்து, இன்று, பிரதமர் மோடி, சீனாவில் இருந்து புறப்பட்டு, மியான்மருக்கு செல்கிறார். மியான்மரில் முன்னதாக 2014ல் இந்திய ஆசிய மாநாட்டில் மோடி கலந்து கொண்டார். கடந்த ஆண்டு, மியான்மர் அதிபர், இந்தியாவுக்கு வருகை தந்தார். இதையடுத்து, இருதரப்பு அரசு பயணமாக, மோடி முதல்முறையாக, மியான்மர் செல்கிறார். 6ம் தேதி, அந்நாட்டின் அதிபர், தின் கியா மற்றும் அரசு ஆலோசகர், ஆங் சான் சூகி ஆகியோரை தலைநகர் நேப்பிடாவில் சந்திக்க உள்ளார். மியான்மரில் உள்ள பாரம்பரிய நகரான பேகனில், ஹிந்து கோவில் ஒன்றை, இந்திய தொல்லியல் துறை புனரமைத்து வருகிறது. பேகனுக்கு செல்லும் பிரதமர் மோடி, அக் கோவிலை பார்வையிட உள்ளார். வரும் 7ம் தேதி பிரதமர் மோடி தாயகம் திரும்புவார் என வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.