உடல்நிலை பாதித்த பெண், குழந்தையை 7 கிமீ தூரம் தோளில் சுமந்து சென்ற சிஆர்பிஎப் வீரர்கள்: மலைகள், நதிகளை கடந்து மருத்துவமனையில் சேர்த்தனர்
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 7 கிமீ தூரம் தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். மாவோ தீவிரவாதிகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் சட்டீஸ்கரும் ஒன்று. இம்மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மத்திய ரிசர்வ் படை வீரர்கள் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் கடே கல்யாண் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப் பகுதியில் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, நய்னார் என்ற கிராமத்தின் சாலையோரம் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் படுத்துக் கிடந்தார். அவருக்கு அருகில் 2 மாத குழந்தை அழுதுக் கொண்டு இருந்தது.
இதை பார்த்த வீரர்கள் அருகே சென்று விசாரித்தனர். அதில், அந்த பெண்ணின் பெயர் கோசி என்பதும், தீவிரமான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. கணவர், உறவினர்கள் கைவிட்டு சென்ற நிலையில், வீரர்கள் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். கிராமத்தை சுற்றி மலைகள் இருப்பதால் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு செல்வது இயலாத காரியம். ஆம்புலன்ஸ் சேவையையும் பயன்படுத்த முடியாதபடி கிராமத்தின் சாலை மாவோயிஸ்டுகளால் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. இதையடுத்து, வீரர்கள் மரக்கிளைகளை பயன்படுத்தி ‘ஸ்டெரக்ச்சர்’ கட்டினர். அதில் அந்த பெண்ணையும், 2 மாத கைக்குழந்தையை அமர வைத்து தோளில் சுமந்தபடி வந்தனர்.
மலைகள், ஆறுகளை தாண்டி 7 கிமீ தூரம் அந்த பெண்ணை வீரர்கள் சுமந்து வந்து, கடம் கிராமத்தை அடைந்தனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அந்த பெண் அழைத்து செல்லப்பட்டு சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தற்போது கோசியும், குழந்தையும் மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளனர். வீரர்களின் இந்த மனிதாபிமானம் அ்பபகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.