எடப்பாடி முதல்வராக பதவியில் தொடர 109 எம்எல்ஏக்கள் நேரடி ஆதரவு: முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதி















சென்னை: முதல்வர் எடப்பாடி தலைமையில் சென்னையில் நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் 109 அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். முதல்வர் எடப்பாடி எடுக்கும் அனைத்து முடிவுகளையும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் பங்கேற்கவில்லை. இதனால் அவர்களது பதவியை பறிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என அதிமுகவினர் இரண்டு அணிகளாக செயல்பட்டனர். பின்னர் இரண்டு அணிகளும் இணைந்தது. ஓபிஎஸ் அணியினரை கட்சியில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.டி.வி.தினகரன் தலைமையில் தனி அணியாக ஒன்று பிரிந்தது. அதன்படி, அதிமுக தற்போது எடப்பாடி அணி, டி.டி.வி.தினகரன் அணி என்று செயல்பட்டு வருகிறது. டி.டி.வி.தினகரன் அணியில் 21 எம்எல்ஏக்கள் தற்சமயம் உள்ளனர். அவர்கள் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 28ம் தேதி அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமை கழக நிர்வாகிகள் என சுமார் 250 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 80 எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர். எடப்பாடி அணியை சேர்ந்த 30 எம்எல்ஏக்கள் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் என மொத்தம் 51 எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளாதது பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போதுள்ள சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடிக்கு மெஜாரிட்டிக்கு தேவையான 117 எம்எல்ஏக்கள் ஆதரவை விட குறைவாக இருப்பதால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி, மாவட்ட வாரியாக அதிமுக எம்எல்ஏக்களை நேரில் அழைத்து பேசினார். அப்போது எம்எல்ஏக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து தற்போது தனக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்பதை உறுதியாக தெரிந்து கொள்ள முதல்வர் எடப்பாடி முடிவு செய்தார். அதற்காக, அதிமுக எம்எல்ஏக்களின் அவசர கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செப்டம்பர் மாதம் 5ம் தேதி (நேற்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் தொலைபேசி மூலம் கட்சியின் தலைமை அலுவலகம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேருக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. எம்எல்ஏக்கள் கூட்டத்தை தொடர்ந்து தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள் கூட்டமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அறிவித்தபடி, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. காலை 9.30 மணி முதலே எம்எல்ஏக்கள் வர தொடங்கினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை 10.45 மணிக்கு தலைமை அலுவலகம் வந்தார். காலை 11 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் என 109 பேர் கலந்து கொண்டனர். பேராவூரணி தொகுதி எம்எல்ஏ கோவிந்தராஜ் உடல்நலம் சரியில்லாததால் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. அதே நேரத்தில் அழைப்பு விடுக்கப்பட்டும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேரும் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இரு பக்கமும் ஆதரவு என்று கூறப்பட்ட வில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா, திருப்பரங்குன்றம் போஸ் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எம்எல்ஏக்கள் தங்களுடைய குறைகளை தெரிவித்தனர். அதனை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதியளித்ததுடன், எம்எல்ஏக்கள் தங்கள் குறைகளை தங்கள் மாவட்ட அமைச்சர்களிடம் வெளிப்படையாக தெரிவிக்கலாம் என்றார். மாவட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால், மூத்த அமைச்சர்களை சந்தித்து கூறலாம் என்றும் கேட்டுக்கொண்டார். 

மேலும், 12ம் தேதி நடைபெற உள்ள அதிமுக ெபாதுக்குழு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்காத 21 எம்எல்ஏக்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது, அவர்களின் எம்எல்ஏ பதவியை பறிப்பது போன்ற நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். அந்த தீர்மானத்தில், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும், அதிமுக சட்டமன்ற குழு தலைவரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று, அவர் மேற்கொள்ளும் அனைத்து முடிவுகளையும் முழு மனதுடனும், உள்ள உறுதியுடனும் ஏற்றுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டிருந்தது. இந்த தீர்மானம் அனைத்து எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

எம்எல்ஏக்கள் கூட்டத்தை தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் அவைத்தலைவர் மசூதுதனன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வருகிற 12ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 3000 பேர் உள்ளனர். அவர்களை  கண்டிப்பாக கூட்டத்தில் பங்கேற்க அழைத்து வர வேண்டும் என்று 46 மாவட்ட செயலாளர்களுக்கு கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியல் அளிக்கப்பட்டு, அவர்களை வருகிற 12ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு சிறப்பு பஸ் ஏற்பாடு செய்து, அழைத்து வரும்படி கூறப்பட்டது. மாவட்ட செயலாளர்களாக உள்ள கலைராஜன், வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், ரெங்கசாமி ஆகிய 4 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் அவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url