சவுதியில் இனி பெண்களும் கார் ஓட்டலாம் : அரசர் அனுமதியளித்து உத்தரவு
சவுதி: சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதியளித்து அந்நாட்டு அரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டுள்ளார். சவுதி அரேபியா நாட்டில் பெண்கள் கார் ஓட்ட நேற்று வரை அனுமதியில்லாத நிலையில், அந்த உரிமையை பெற பெண்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இந்நிலையில் சவுதி அரேபிய அரசு பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்நாட்டு பெண்கள் மிக உற்சாகமடைந்துள்ளனர்.
இது குறித்து சவுதி பெண் ஒருவர் கூறுகையில் தாம் அல்-நஜா தெருவில் வசிப்பதாகவும், டிரைவருக்காக காத்திருக்காமல் தனது தங்கையை அழைத்து வர சென்றதாகவும் தெரிவித்தார். இனி எந்த ஒரு அவசர வேலையாக வெளியே செல்ல நேர்ந்தாலும் டிரைவருக்காக காத்திருக்க தேவையில்லை என உற்சாகமாக கூறினார். தாம் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் காரை இயக்குவதாகவும், இதற்கு அனுமதியளித்த சவுதி அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். பழமைவாத மத குருமார்களை சம்மதிக்க வைத்து, சவுதி அரேபிய மன்னர் சல்மான் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு உலகநாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன. இதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய அமெரிக்க செய்தி தொடர்பாளரான ஹூதர் நவ்ராட், மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது. வாகனங்களை ஓட்ட பெண்களை அனுமதித்துள்ளது முக்கியமான ஒன்று. பெண்களுக்கு சம உரிமைகளை தர சவுதி அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை என்றார். சில நாட்களுக்கு முன்புதான் ஆண்களுடன் , பெண்கள் பொதுநிகழ்ச்சிகளில் சரிசமமாக பங்கேற்க அனுமதி வழங்கியது. கடந்த 2015-ல் தான் சவுதியில் பெண்கள் தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.