வங்க கடலில் காற்று மேலடுக்கு சுழற்சி : தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை : மத்திய மேற்கு வங்க கடலில் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான், அதிக மழைபொழிவை பெறுகிறது. வடகிழக்கு பருவமழை ஒரு சில நாட்களே உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே அணைகள், ஏரிகள், கால்வாய்கள் பராமரிப்பு பணி மேற்கொண்டு தண்ணீர் தேக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை இயல்பை விட 31 சதவீதம் அதிகமாக பெய்தும் ஏரிகளில் தண்ணீர்வரத்து குறைவாகவே உள்ளது. அணைகள், ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகள், மழை நீர் செல்லும் கால்வாய்களை ஆக்கிரமித்து குடியிருப்புகள் எழுப்பப்பட்டது இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆந்திரா கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்கிறது. நேற்றும் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையில் நேற்று காலை 6 மணி முதல் பல இடங்களில் மிதமான மழை பெய்தது.
இந்நிலையில், மத்திய மேற்கு வங்க கடலில் காற்று மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை மையம் வெளியிட்ட முன்னறிவிப்பில் கூறியுள்ளதாவது: செப்டம்பர் 27ம் தேதி வரை வட தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களிலும், தென்தமிழகத்தின் சில இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, அதன்சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, புறநகரில் அதிகபட்ச வெப்பநிலை 90 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த வானிலை முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் சாரல் மழை
சென்னையில் இன்று காலை லேசான சாரல் மழை பெய்தது. இதனால் வழக்கத்தைவிட காலை நேரத்தில் குறைந்த வெப்பநிலை பதிவாகி, இதமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து மழை நின்றுவிட்ட நிலையிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என்ற நிலை காலை முழுவதும் இருந்தது.