சிந்து நதி ஒப்பந்தம் : இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை உலக வங்கி
நியூயார்க்,
சிந்து நதியில் கிஷன் கங்கா மற்றும் ராட்டில் என்ற 2 நீர் மின் நிலையங்களை அமைப்பதற்கு இந்தியா திட்டமிட்டது. இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே, 1960-ம் ஆண்டு உலக வங்கி உதவியுடன், சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. நீர் மின் திட்டங்களால் பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்படும் என குற்றம்சாட்டி வந்தது. இந்த விவகாரத்தை தீர்த்து வைக்கும் பொறுப்பு உலக வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தநிலையில் சிந்து நதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை 14-ம் தேதி, 15-ம் தேதியில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் அமர்சிங் தலைமையிலான குழு பங்கேற்றது. அக்குழுவில் சிந்து நதி ஆணையர், வெளியுறத்துறை, மத்திய நீர் கமிஷன் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தான் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் ஆரிப் அகமது கான் தலைமையில் நீர் மற்றும் மின்சாரத்துறை செயலாளர் யூசப் நசீம் கோகர், சிந்து நதி ஒப்பந்தத்தின் உயர் ஆணையர் மிர்சா ஆசிப் பாய்க் மற்றும் நீர்வள துறையின் கூட்டு செயலாளர் சயித் மெஹர் அலிஷா ஆகியோர் பங்கேற்றனர்.
இரு நாடுகள் இடையே நடைபெற்ற கூட்டம் நிறைவடைந்த நிலையில் இது குறித்து உலக வங்கி சார்பில் கூறியதாவது:
கடந்த 2 நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்த வித உடன்பாடும் ஏற்படவில்லை. சிந்து நதி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். இரு நாடுகளும் இணைந்து உடன்படிக்கு இணங்க உலக வங்கி முயற்சி மேற்கொள்ளும்.
இரு நாடுகள் குறித்த பேச்சுவார்த்தைக்கான அடுத்த கட்ட தேதி குறிப்பிடபடவில்லை.