பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு தான் சசிகலா-அமைச்சர் ஜெயக்குமார்









சென்னை

தமிழகம் முழுவதும்  நேற்று  மாலை  அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆங்காங்கே பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர்கள் சசிகலா மற்றும் தினகரன் மீதான தாக்குதலை அதிகபடுத்தி உள்ளனர்.

சென்னை தங்க சாலை மணிக்கூண்டு அருகே நேற்று நடைபெற்றது அதில் கலந்து கொண்டு பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

எங்களை வீட்டுக்கு போக சொல்கிறார்கள். நான் வீட்டில் இருந்து கூட்டத்துக்கு வந்தேன். கூட்டம் முடிந்ததும் வீட்டுக்கு சென்றுவிடுவேன். ஆனால் அவர் (டி.டி.வி.தினகரன்) மாமியார் வீட்டுக்கு தான் செல்லப்போகிறார். அது எந்த மாமியார் வீடு? என்று உங்களுக்கே தெரியும் என பேசினார்.

திண்டுக்கல்லில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில்  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது சசிகலா குடும்பத்தினர் தான், ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் என தமிழக மக்கள் பேசுகின்றனர். சிகிச்சைக்கான மருந்தை உலகத்தில் எங்கு இருந்தாலும் வாங்கி இருக்கலாம். ஆனால், நோய் முற்றி இயற்கையாக மரணம் அடைய வேண்டும் என விட்டுவிட்டனர்.   உண்மையை பேசி விடுவார் என்பதற்காக மத்திய மந்திரி அருண்ஜெட்லி, கவர்னர், ராகுல்காந்தி என பலர் வந்தும் யாரையும் பார்க்க விடவில்லை என பேசினார்.

திருச்சி மாநகராட்சியின் 22வது வார்டுக்கு உட்பட்ட மல்லிகைபுரத்தில் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன உடற்பயிற்சி கூடத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் சசிகலா தான் என்றும் அதற்காக தான் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். கட்சியில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத டிடிவி தினகரன் ஜெயலலிதாவால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டவர் என்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம்  பேசும் போது கூறியதாவது:-

பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்புதான் சசிகலா . பரமசிவன் கழுத்தில் இருந்து விழுந்த தீண்டத்தகாத பாம்பு சசிகலா. எடப்பாடி சிறை செல்வார் என்று டிடிவி தினகரன் கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. மன்னார்குடி மாபியா கும்பல் 21 பவர் சென்டர்கள் மூலம் தமிழகத்தை ஆட்டி படைத்து வந்தனர்.  கமல் தனது அரசியல் கருத்தில் தெளிவு இல்லாதவர்.இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url