ஆறு நிறைய தண்ணீர் ஓடினாலும் குடிநீர் இல்லை: நொய்யல் ஆற்றின் அவலம்!
கோவை: ஆறு நிறைய தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும் அள்ளிப் பருக முடியாத அவலம் நொய்யல் ஆற்றங்கரையோர கிராம மக்களின் சோகமா இருந்து வருகிறது. கோவையில் உற்பத்தியாகி கொடுமூடி அருகே காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆறு, திருப்பூரைக் கடக்கும் முன்பே அதன் இயல்பை இழந்து விடுகிறது. நீதிமன்றம் உத்தரவிட்டு சுத்திகரிப்பு அமைத்துவிட்டதாக கூறினாலும், சாயக்கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலப்பது இன்றுவரை தொடர்ந்து கொண்டே உள்ளது என கிராம மக்கள் புகார் கூறியுள்ளனர்.
நொய்யல் ஆற்றின் குறுக்கே 1962ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரத்துப்பாளையம் அணையில் கழிவுநீர் பிரச்சணையால் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீரை சேமிக்க நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. இதனால் கோவை மாவட்டத்தில் கன மழைக் கொட்டினால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் இந்த ஆற்று நீரால் விவசாயம் பொய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்று சுற்றுவட்டார கிராம விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
20,000 ஏக்கர் பாசன வசதிக் கொண்ட ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கப்படாததால் ஆங்காங்கே சீமைக் கருவேல மரங்கள் பரவிக்கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும் தண்ணீரை தேக்கி குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியாதது வேதனை அளிப்பதாக ஆற்றங்கரையோர கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.