வாணியம்பாடியில் புளூவேல் விளையாடிய பள்ளி மாணவன் பத்திரமாக மீட்பு
வாணியம்பாடி காதர்பேட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் ரியான் அகமது (வயது16) என்ற மாணவன் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக பள்ளிக்கு வரும்போது மற்ற மாணவர்களை விட மாறுபட்ட நிலையில் ரியான் அகமது நடந்து கொண்டார். சில மாணவர்களிடம் பேசும்போது ப்ளூவேல் இணையதள விளையாட்டு குறித்து தொடர்ந்து பேசி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் காலாண்டு தேர்வு நடந்து கொண்டிருந்த நேரத்தில் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் வெளிவரவில்லை. இது மட்டுமின்றி பள்ளி தேர்வுத் தாளில், இதற்கு மேல் உயிருடன் இருக்கப் போவதில்லை என பாதிக்கப்பட்ட மாணவர் குறிப்பிட்டு இருந்ததும், விசாரணையில் தெரிய வந்தது.
சந்தேகம் அடைந்த ஆசிரியர் அங்கு சென்று பார்த்த போது செல்போன் வைத்துகொண்டு விளையாடிக்கொண்டு இருந்தது தெரியவந்தது. அதனையடுத்து மாணவரை மீட்டு தலைமை ஆசிரியர் ரிஸ்வான் அகமத்திடம் அவர் ஒப்படைத்தார். அந்த மாணவனின் கையில் பிளேடால் அறுத்து நீலத் திமிங்கலத்தை வரைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மற்றொரு கையில் பல இடங்களில் பிளேடால் கீறியிருந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டது.
அதைத்தொடர்ந்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். மேலும் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர்களும், போலீசாரும் பள்ளிக்கு விரைந்து சென்று மாணவனுக்கு ஆசிரியர்களுடன் சேர்ந்து கவுன்சிலிங் அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.