சாரணர் இயக்கத்துக்கான தேர்தலின் வாக்குப்பதிவில் முறைகேடு புகார்: இரு தரப்பினரிடைய மோதலால் பரபரப்பு








சென்னை: சென்னையில் நடைபெறும் சாரணர் இயக்கத்துக்கான தேர்தலில் முறைகேடு புகார் எழுந்ததால் மோதல் ஏற்பட்டது. தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் கடைசியாக 2010ம் ஆண்டு நடந்தது. அதைத் தொடர்ந்து, 2013ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தலைவர் பதவிக்கு போட்டி உருவாகி, தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு சாரணர் அமைப்பின் செயற்குழு கடந்த மார்ச் 18-ல் கூடியது. அதைத்தொடர்ந்து, பொதுக்குழு கூட்டமும் நடந்தது. இதில் துணை விதிமுறைகளில் ஒருசில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தல் 16ம் தேதி நடைபெறும் என்று கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும், பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குனர் பி.மணியும் போட்டியிடுகின்றனர்.

அதன்படி இன்று காலை சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க தலைமையகத்தில் தொடங்கியது. இன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. காலை 10.30 மணிக்கு தொடங்கவிருந்த தேர்தல் முன்கூட்டியே 10 மணிக்கு தொடங்கியது. மேலும் தேர்தல் தொடங்கியபோதே ஹெச்.ராஜாவின் ஆதரவாளர்கள் டெல்லியில் உள்ள சாரணர் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து தேர்தலை நடத்த வேண்டாம் என்று கடிதம் வந்திருப்பதாக கூறினர்.

கடிதத்தை வேட்பாளர் ஹெச்.ராஜா தேர்தல் பொறுப்பாளர்களிடம் கொடுத்தார். அந்த கடிதத்தில் தேர்தலில் வாக்கு செலுத்தக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், அதனால் இருக்கின்ற காலி இடங்களை காட்டிலும் அதிகமான வாக்குகள் பதிவாக கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால் இந்த தேர்தலை உடனடியாக நிறுத்த வேண்டும் என தகவல் வந்திருப்பதாக தெரிவித்து தேர்தலை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு தேர்தலை நிறுத்துமாறு தங்களுக்கு எந்தவித உத்தரவும் வரவில்லை என்று பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தொடர்ந்து தேர்தல் நடைபெறாத வண்ணம் எச்.ராஜா தரப்பினர் இடையூறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தேர்தலை நிறுத்த ஹெச்.ராஜா முயல்வதாக எதிர்தரப்பு குற்றம்சாட்டியது. இதனையடுத்து தேர்தல் நடைபெறும் இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு, வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url