லண்டன் சுரங்க ரயிலில் வெடி விபத்து: ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
லண்டன்: லண்டன் சுரங்க ரயிலில் நடந்த வெடிகுண்டு விபத்திற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டன் நகரின் சில பகுதிகளை இணைக்கும் வகையில் பூமிக்கு அடியில் செல்லும் சுரங்க ரெயில் (டியூப் டிரெயின்) சேவை இயங்கி வருகிறது. நேற்று வழக்கம்போல் லண்டனின் பார்சன்ஸ் கிரீன் ரயில் நிலையத்திற்கு சுரங்க ரயில் காலை 8.20 மணிக்கு வந்தது. 800 பயணிகள் பயணிக்கக் கூடிய அந்த ரயிலில், காலை நேரம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.
பயணிகள் ஏறியதும் ரயில் புறப்பட்ட 2வது நொடியில், திடீரென ஒரு பெட்டியில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. அந்த பெட்டி முழுவதும் தீப்பந்துகள் பறந்தன. பயங்கர புகை மூட்டம் ஏற்பட்டது. இதைப் பார்த்த மற்ற பெட்டிகளில் இருந்த பயணிகள் அலறித் துடித்தனர். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு கதவுகள் திறந்து விடப்பட்டன. பயணிகள் உயிர் பிழைக்க, ஒருவரை ஒருவர் முண்டியடித்து ஓடியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பெண்கள், பள்ளி சிறுவர்கள் காயமடைந்தனர்.
சில பயணிகள் ரயில் பெட்டியில் சிக்கிக் கொண்டனர். ரயில் முழுவதுமாக வெடித்து விடும் என்ற அச்சத்தில் ரயில் நிலையத்தில் இருந்தவர்களும் வெளியில் ஓடினர். இதனால், ரயில் நிலையம் போர்க்களம் போல் காட்சி அளித்தது. இந்த வெடி விபத்தில் சுமார் 29 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. தகவலறிந்த அடுத்த 5வது நிமிடத்தில் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.
அவர்கள் சோதனையிட்டதில், ரயிலின் பெட்டியில் ஒரு பெரிய பக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரயில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பக்கெட்டுக்குள் சிலை வயர்கள் இணைக்கப்பட்டிருந்ததால் இது தீவிரவாத தாக்குதலாக இருககலாம் என்ற கண்ணோட்டத்தில் லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். இந்த தகவலை அந்த அமைப்பின் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.