Type Here to Get Search Results !

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை தொடர்ந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் சசிகலாவை நீக்க முடிவு: எடப்பாடி, ஓபிஎஸ் தீவிர ஆலோசனை





சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியதை தொடர்ந்து, அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் சசிகலாவை நீக்க முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அதிமுக கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். அதைத்தொடர்ந்து, டி.டி.வி.தினகரனுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு அதிமுக கட்சியை அவரே வழிநடத்துவார் என்றும் சசிகலா அறிவித்தார்.

ஆனால் டி.டி.வி.தினகரனின் நடவடிக்கைக்கு கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அவரை முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் விலக்கி வைத்தனர். ஆனால் டி.டி.வி.தினகரன் தனக்கு எதிராக செயலபட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கி வருகிறார். இதற்கு சசிகலாவும் உடந்தையாக செயல்படுவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணை பொதுச்செயலாளர் தினகரனின் பதவிகளை பறிக்க நேற்று அதிமுக பொதுக்குழு அவசரமாக கூட்டப்பட்டது.
பொதுக்குழுவில், 29-12-2016 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அன்றாட பணிகளை மேற்கொள்ள சசிகலா அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது. சசிகலாவால் 30.12.2016 முதல் 15.2.2017 வரை மேற்கொண்ட நியமனங்களும் ரத்து செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மூலம் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி ரத்தானதுடன், சசிகலாவால் துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரனின் கட்சி பதவி மற்றும் தினகரனை அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினராக சசிகலா சேர்த்தது உள்ளிட்ட அனைத்தும் ரத்தாகி விடும். இதன்மூலம் டி.டி.வி.தினகரன் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினரே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.இந்த பரபரப்பான சூழ்நிலையில், சசிகலாவையும் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிர ஆலோசனையில்  ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, விரைவில் சசிகலாவிடம் இருந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பும் பறிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது 2011ம் ஆண்டு சசிகலா, அவரது கணவர் நடராஜன், திவாகரன், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தை சேர்ந்த 21 ேபர் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டனர் என்று கூறி அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கினார். பின்னர் சசிகலா மன்னிப்பு கடிதம் கொடுத்ததால், அவரை மட்டும் அதிமுக கட்சியின் உறுப்பினராக ஜெயலலிதா இணைத்துக் கொண்டார்.
இதை பயன்படுத்திதான் ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன் சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் சசிகலா ஜெயிலுக்கு போகும் முன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரனை கடந்த ஜனவரி மாதம் மீண்டும் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினராக சேர்த்ததுடன், கட்சியின் துணை பொதுச்செயலாளராக பதவியும் வழங்கினார். ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில், அடுத்து கட்சிக்கு தலைமை யார் என்று அதிமுக நிர்வாகிகள் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் கட்சியின் பொறுப்புக்கு வந்து விட்டார்கள்.

பின்னர்தான், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சுதாரித்துக் கொண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை அதிமுக கட்சியை கைப்பற்ற விட மாட்டோம் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர். அதில் தற்போது வெற்றியும் பெற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது. தினகரன் கட்சி அடிப்படை உறுப்பினரின் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் தான் இனி அதிமுகவை வழி நடத்தி செல்ல பொதுக்குழு அங்கீகாரம் அளித்துள்ளது. அதிமுக கட்சியில் ஒருவரை நீக்கவோ, சேர்க்கவோ இவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்சிக்கு விரோதமாக செயல்பட்டு வரும் சசிகலாவின் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விரைவில் நீக்கப்படுவார். அதற்காக ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடியும் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad