உத்தர பிரதேசத்தில் கேலிக்கூத்து விவசாயிகளுக்கு 19 காசு, 1, 10 கடன் தள்ளுபடி
லக்னோ: உபி.யில் அறிவிக்கப்பட்ட விவசாயிகள் கடன் தள்ளுபடி கேலிக்கூத்தாக மாறியுள்ளது. கடன் தள்ளுபடி என்ற பெயரில், 19 காசுகள், ரூ.1, ரூ.10 தள்ளுபடி செய்துள்ள சம்பவத்தால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று, யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜ ஆட்சி அமைத்தது. தேர்தல் பிரசாரத்தின்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய பயிர்க் கடன்களை ரத்து செய்வோம் என்று பாஜ வாக்குறுதி அளித்திருந்தது. இதன்படி, விவசாயிகளின் ரூ.36 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல் அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
இதன்படி, முதல் கட்டமாக 11.93 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய 7,371 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, உபி மாநில அமைச்சர் மன்னு கோரி தலைமையில் கடந்த திங்களன்று நடைபெற்ற விழாவின்போது விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், இந்த கடன் தள்ளுபடி அறிவிப்பு கேலிக்கூத்தாகி உள்ளது.
ஈஷ்வர் தயாள் என்ற விவசாயிக்கு வெறும் 19 காசுகள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ராமானந்த் என்பவருக்கு 1.79 காசுகளும், முன்னிலால் போளி என்பவருக்கு 2ம் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மாநில அரசு வெறும் 19 பைசா, 2 மற்றும் 10 ரூபாய்க்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கியுள்ளது விவசாயிகளிடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், இத்தகைய சிறிய தொகைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இது விவசாயிகளை பரிகாசம் செய்யும் நடவடிக்கையாக உள்ளது என்று சமாஜ்வாடி விமர்சனம் செய்துள்ளது.
அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது?
உபி வேளாண் அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாகி கூறுகையில், ‘‘இதில் அதிர்ச்சி அடைய என்ன உள்ளது? அவர்களது வங்கிக் கணக்கில் என்ன கடன்தொகை இருந்ததோ அது தள்ளுபடி செய்யப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. தொகை சிறியதா, பெரியதா என்பதற்கெல்லாம் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது’’ என்று பதில் அளித்துள்ளார்.