ஜானி பேர்ஸ்டோ அபார சதம் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இங்கிலாந்து
மான்செஸ்டர்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஓல்டு டிரபோர்ட் மைதானத்தில் நடந்த இப்போட்டி, மழை காரணமாக தலா 42 ஓவர் கொண்ட ஆட்டமாக அறிவிக்கப்பட்டது. டாசில் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ், 42 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 204 ரன் எடுத்தது. கேப்டன் ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 41 ரன் எடுத்தார். கிறிஸ் கேல் 37, ஷா ஹோப் 35, பாவெல் 23 ரன் எடுத்தனர்.
இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் 3, வோக்ஸ், ரஷித் தலா 2, வில்லி, மொயீன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 30.5 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 210 ரன் எடுத்து வென்றது. ஹேல்ஸ் 19, ஜோ ரூட் 54, கேப்டன் மோர்கன் 10 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 100 ரன் (97 பந்து, 11 பவுண்டரி), ஸ்டோக்ஸ் 23 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்த ஜானி பேர்ஸ்டோஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி நாட்டிங்காம், டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் தோற்றதால், அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஐசிசி உலக கோப்பை தகுதிச்சுற்று தொடரில் வெஸ்ட் இண்டீஸ் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.