அரசியல் கமலுடன் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்திப்பு
சென்னை : டிவிட்டரில் நடிகர் கமல் தொடர்ந்து, அரசியல் கருத்துகளை தெரிவித்து வருகிறார். தமிழகத்தில் அனைத்து துறையிலும் ஊழல் பெருகி விட்டதாக கமல் குற்றம்சாட்டினார். தனது ரசிகர்களும், பொது மக்களும் அனைத்து துறை அமைச்சர்களுக்கும் இணையதளம் மூலம் அந்தந்த துறைகளில் நடக்கும் முறைகேடுகளை புகாராக அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
கமலுக்கு அரசியல் தெரியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் தனி கட்சி தொடங்க உள்ளதாகவும் நடிகர் கமல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னை வருகிறார். தொடர்ந்து, நடிகர் கமலை சந்தித்து பேச உள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.