சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கான சலுகைகள் ரத்து : டிரம்ப் முடிவால் 8 லட்சம் இளைஞர்கள் பாதிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவுக்குள் சிறுவயதில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சலுகைகள் வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதால் 8 லட்சம் பேர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் பாராக் ஒபாமா கொண்டு வந்த திட்டத்தால் அமெரிக்கர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகள் பறிபோகிறது என்பது டிரம்பின் கருத்து. இது பற்றி அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே கூறியிருந்த அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
அதாவது ஒபாமா ஆட்சி காலத்தில் அமெரிக்காவுக்குள் சிறுவயதில் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள், வளர்ந்து பெரியவர்களான பின் கல்வி, வேலைவாய்ப்புகளில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. குடியுரிமை சட்டத்தில் செய்யப்பட்ட இந்த சீர்திருத்த நடவடிக்கைகளால் அமெரிக்கர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். டிரம்பின் இந்த நடவடிக்கையை கண்டித்து வாஷிங்டனில் வெள்ளை மாளிகை முன்பு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுவயதில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட்டால் பல்வேறு நாடுகளை சேர்ந்த 8 லட்சம் இளைஞர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 7 ஆயிரம் இந்தியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் டிரம்பின் முடிவுக்கு அவரது சொந்த கட்சியான குடியரசு கட்சியிலேயே கடும் எதிர்ப்பு உள்ளதால் சட்டவிரோத குடியேற்ற சலுகை சத்தியமாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.