வருமானத்துக்கு அதிகமாக 7 எம்பி, 98 எம்எல்ஏக்கள் சொத்துக்கள் குவிப்பு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
புதுடெல்லி: மக்களவை, மாநிலங்களவை எம்பி தேர்தல், சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுவில் தங்களுடைய சொத்து விவரங்களை தெரிவிக்கும் நடைமுறை அமலில் உள்ளது. அதன்படி, வேட்பாளர்கள் தங்கள் பெயரிலும், குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகள், வங்கி சேமிப்பு, நகைகள் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கின்றனர். ஆனால், அவற்றுக்கான ஆதாரம் தருவதில்லை. இந்த ஆதாரங்களை வெளிப்படையாக தெரிவிக்கும் நடைமுறையை கட்டாயமாக்க உத்தரவிடும்படி உச்ச நீதிமன்றத்தில் லோக் பிரஹாரி (பொது கண்காணிப்பு) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு கடந்த 7ம் தேதி பொது நலன் வழக்கு தொடர்ந்தது. அப்போது இதை விசாரித்த நீதிபதிகள் ஜெலமேஷ்வர், அப்துல் நசீர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ‘கடந்த 2 தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலங்களில் அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பு 500 சதவீதம் உயர்ந்திருப்பது தொடர்பாக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்பதை தெரிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய நேரடி வரிகள் வாரியம் பதில் மனு தா்க்கல் செய்துள்ளது. அதில், ‘நாட்டில் உள்ள அரசியல்வாதிகளில் 37 எம்பி.க்கள், 257 எம்எல்ஏ.க்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார். இது பற்றி விசாரணை நடத்தியதில், நாட்டில் 7 எம்பி.க்கள் மற்றும் 98 எம்எல்ஏ.க்களின் சொத்து மதிப்பு, தேர்தல் நேரத்தில் இருந்ததை விட பல மடங்கு திடீரென உயர்ந்துள்ளது. இவை வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துகள். இது குறித்த முழு விவரங்களும் விசாரணையின் போது நீதிபதிகளின் முன்னிலையில் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.