ஆசிரியை தண்டனை வழங்கியதால் 5-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் ஷாக்பூர் பகுதியில் உள்ள செயின்ட் அந்தோனி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்த மாணவன் நாவ்நீத் (வயது 11) வகுப்பு தலைமை ஆசிரியை பாவனா ஜோசப் தண்டித்ததால் தற்கொலை செய்துக் கொண்டு உள்ளான். இதுதொடர்பாக சிறுவனின் தந்தை ரவி பிரகாஷ் கொடுத்த புகாரின் பெயரில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளது. ஆசிரியை தண்டனை வழங்கியதால் மனம் உடைந்த சிறுவன் நாவ்நீத் கடந்த 15-ம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டான் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விஷம் அருந்தி அபாய கட்டத்தில் மருத்துவமனையில் சிச்சை பெற்றுவந்த சிறுவன் நாவ்நீத் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
சிறுவன் மரணம் அடைந்த நிலையில் அவனுடைய பள்ளி பையில் இருந்து தற்கொலை கடிதத்தை பெற்றோர்கள் எடுத்து உள்ளனர். அதில் சிறுவன் தன்னுடைய முடிவிற்கு ஆசிரியை பாவனா ஜோசப்தான் காரணம் என எழுதிஉள்ளார்.
“இன்று என்னுடைய தேர்வின் முதல்நாள். என்னை ஆசிரியை 9.15 மணிவரையில் நிற்க செய்தார், என்னை அழ செய்தார். நேற்றும் என்னை மூன்று வகுப்புக்கள் முடிவும் வரையில் நிற்க செய்தார். அவர் மீது நம்பிக்கை கிடையாது. நான் உயிரை இழக்க முடிவு செய்துவிட்டேன். என்னுடைய ஆசிரியையிடம் நான் கடைசியாக கேட்பது, பிற மாணவர்களை இதுபோன்று தண்டிக்காதீர்கள் என்றுதான்,” என சிறுவன் கடிதத்தில் எழுதிவைத்து உள்ளான் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியைக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த போலீஸ் பாவனாவை கைது செய்து உள்ளது.