ஜிஎஸ்டி வரி ரீபண்ட் வழங்க ரூ.30,000 கோடி ஒதுக்க மத்திய அரசு திட்டம்
புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி ரீபண்ட் வழங்க ரூ.30,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1 முதல் அமலில் உள்ளது. இதில் ஏற்றுமதியாளர்கள் வரி ரீபண்ட் கோரி விண்ணப்பிக்கும்போது, உடனடியாக கிடைப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு, இதற்காக தனி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு விரைவாக ரீபண்ட் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரீபண்ட்கள் திரும்ப அளிக்க தொகுப்பு நிதியாக ரூ.20,000 கோடி முதல் ரூ.30,000 கோடி வரை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ரீபண்ட் கோரி வரும் விண்ணப்பங்களுக்கு இந்த நிதியில் இருந்து உடனடியாக ரீபண்ட் வழங்க முடியும். நிதியை எவ்வாறு ஒதுக்குவது, திட்டத்தை செயல்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து துவக்க கட்ட ஆலோசனைகள் நடந்து வருகின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதலுக்கு பிறகு நடைமுறைக்கு வரும் என்றார்.