ஒரே நாளில் 13 படங்கள் ரிலீஸ் : பெரிய நடிகர்களின் படங்களால் சிறிய படங்கள் கலக்கம்
பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜை போன்ற திருவிழா சீசனில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவருவதும் அத்துடன் சேர்த்து சிறிய பட்ஜெட் படங்கள் வருவதும் அந்த கால நடை முறையாக இருந்தது. இப்போதெல்லாம் திருவிழா நாட்களில் பெரிய படங்கள் மட்டுமே வெளியாகின்றன. அப்படி வெளியாகும் ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே மொத்தம் உள்ள 1100 தியேட்டர்களையும் பங்கு போட்டுக்கொள்கின்றன. சிறிய பட்ஜெட் படங்கள் இந்த சமயத்தில் ரிலீஸ் ஆவதற்கு தியேட்டர் கிடைக்காத சூழல் உள்ளது.
அடுத்தவாரம் ஆயுதபூஜை வருவதால் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்திருக்கும் ஸ்பைடர், விஜய் சேதுபதியின் கருப்பன், கவுதம் கார்த்திக்கின் ஹர ஹர மகாதேவகி, நயன்தாராவின் அறம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இந்த படங்களுக்கே பெரும்பாலான தியேட்டர்கள் புக் ஆகிவிடும் சூழல் உள்ளது. மேலும் ஏற்கனவே திரைக்கு வந்துள்ள விஷாலின் துப்பறிவாளன், விக்ரம் பிரபுவின் நெருப்புடா, ஜோதிகாவின் மகளிர் மட்டும், விஷ்ணு விஷாலின் கதாநாயகன் போன்ற படங்கள் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன.
ஆயுதபூஜைக்கு பெரிய படங்கள் ரிலீஸ் ஆகவிருப்பதால் இந்த வாரம், பிச்சுவாகத்தி, ஆயிரத்தில் இருவர், நெறி, தெருநாய்கள், கொஞ்சம் கொஞ்சம், வல்லதேசம், போலீஸ் ராஜ்யம், களவு தொழிற்சாலை, நான் ஆணையிட்டால், திட்டிவாசல், காக்கா, பயமா இருக்கு, கிங்ஸ் மேன் என 13 சிறுபட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.