`தற்போது நடவடிக்கை எடுக்க முடியாது`: எதிர்கட்சிகளிடம் தமிழக ஆளுநர் கைவிரிப்பு?
தமிழகத்தில் தற்போது நிலவும் சூழலில் தான் நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாது என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யசாகர் தங்களிடம் கூறியதாக இன்று (புதன்கிழமை)அவரைச் சந்தித்த இடதுசாரி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜவாஹிருல்லா ஆகியோர் இன்று காலையில் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம்மின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன், ''தமிழகத்தில் இதே சூழ்நிலை நீடித்தால் அது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என்பதால் உடனடியாக ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம்.
மேலும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்காக சில தி.மு.க. உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய முயற்சிக்கிறது இந்த அரசு. இரு அணிகளும் இணைந்த பிறகு உடனடியாக பதவியேற்பு விழாவுக்கு ஆளுனர் ஒத்துழைத்திருக்கிறார். ஆகவே, இப்போதும் காலம் தாழ்த்தாமல் ஆளுநர் சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
தற்போதைய சூழலில் தான்ஏதும் நடவடிக்கை எடுக்க முடியாது என ஆளுநர் தங்களிடம் தெரிவித்துவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறினார்.
"நாங்கள் கோரிக்கை வைத்தபோது, தற்போதைய சூழலில் தான் அதில் தலையிட முடியாது; சட்டம் அதற்கு இடம்தரவில்லை என்று கூறினார். அதிருப்தி தெரிவித்த 19 சட்டமன்ற உறுப்பினர்களும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் என்பதுதான் தற்போதைய நிலை. அப்படியான நிலையில், எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகச் சொல்ல முடியாது.
அவர்களுக்குகிடையில் பிரிந்து சண்டை போட்டுக்கொள்கிறார்கள். அதில் நாங்கள் தலையிட முடியாது என்று கூறினார். ஆனால், 19 உறுப்பினர்கள் உங்களைச் சந்தித்து முறையிட்டிருப்பதால், நீங்கள் சட்டமன்றத்தைக் கூட்ட உத்தரவிட வேண்டும்" என்று கேட்டதாக திருமாவளன் கூறினார்.
ஆளுநரைச் சந்தித்த இந்தத் தலைவர்கள், அவரிடம் அளித்த மனுவில் தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலவரத்தின் காரணமாக ஸ்திரத்தன்மையற்ற சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் நீட் விவகாரம், காவிரி பிரச்சனை, வறட்சி, விவசாயிகள் பிரச்சனை, மோசமடைந்துவரும் சட்டம் - ஒழுங்கு விவகாரம் ஆகியவை கவனிக்கப்படாமல் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஆகவே, உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.