ஒரு கால் இல்லையென்றாலும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவேன்...: டோனி மன உறுதிக்கு பிரசாத் பாராட்டு




சென்னை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின்போது காயம் அடைந்திருந்த டோனி, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கால் இல்லையென்றாலும் விளையாடுவேன் என்று உறுதியுடன் கூறியதாக தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் பாராட்டி உள்ளார். தமிழ்நாடு விளையாட்டு செய்தியாளர் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரசாத் கூறியதாவது: வங்கதேசத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின்போது, பயிற்சியில் ஈடுபட்ட டோனி காயம் அடைந்தார். பாகிஸ்தான் அணியுடனான முக்கியமான ஆட்டத்துக்கு இரண்டு நாள் முன்பாக இது நடந்தது. நள்ளிரவு நேரத்தில் ஜிம்முக்கு சென்று பளுதூக்கும் பயிற்சி செய்த அவருக்கு திடீரென முதுகுப்பிடிப்பு ஏற்பட்டு அப்படியே கீழே விழுந்தார்.

நல்ல வேளையாக எடை தட்டுகள் டோனியின் மீது விழவில்லை. அவரால் எழுந்து நடக்க கூட முடியவில்லை. கடுமையான வலியுடன் தவழ்ந்து வந்த அவரை ஸ்டிரெச்சரில் வைத்து அறைக்கு அழைத்துச் சென்றோம். என்னிடம் எதற்கும் கவலைப்படாதீர்கள் அண்ணா என்றார். என்னால் அப்படி இருக்க முடியவில்லை. பார்திவ் பட்டேலை அவசரமாக அழைத்து தயாராக இருக்க சொன்னேன். போட்டிக்கான அணியை அறிவிப்பதற்கு முன்பு, சீருடை அணிந்துகொண்ட டோனி என்னை அழைத்து ஏன் இவ்வளவு கவலையாக இருக்கிறீர்கள்? எனக்கு ஒரு கால் இல்லையென்றாலும் கூட பாகிஸ்தானுக்கு எதிராக நிச்சயம் விளையாடுவேன் என்று சொன்னதுடன் அந்த போட்டியில் வெற்றியையும் வசப்படுத்தினார். அவரது மன உறுதிக்கு இந்த சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாகும். இவ்வாறு பிரசாத் கூறினார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url